மணிப்பூர் அரசியலில் புதிய திருப்பம்...முதல்வர் பொறுப்பு யாருக்கு? போட்டிக்கு வந்த மூன்றாவது நபர்

முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்காத நிலையிலும் முதல்வர் பைரன் சிங் தலைமையில்தான் பாஜக தேர்தலை சந்தித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐந்து மாநில தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல்வர் பொறுப்பு யாருக்கு அளிக்கப்படும் என்பதில் தொடர் இழுபறி நீடித்துவருகிறது. 

குறிப்பாக, மணிப்பூரில் காபந்து முதல்வர் பைரன் சிங்குக்கும் பிஸ்வஜித் சிங்குக்கும் கடும் போட்டி நிலவிவரும் நிலையில், மூன்றாவது நபராக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவோடு போட்டியில் குதித்துள்ளார் யும்னம் கேம்சந்த் சிங். கடைசி சட்டப்பேரவையில் சபாநாயகராக பதவி வகித்த இவரை, பாஜக மேலிடம் நேற்று தில்லிக்கு அழைத்துள்ளது.

பைரன் சிங், பிஸ்வஜித் சிங் ஆகியோருக்கிடையே நிலவும் அதிகார போட்டியை தவிர்ப்பதற்காக ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் யும்னம் கேம்சந்த் சிங் போட்டியில் குதித்தாகக் கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ ஆகியோர் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு இன்று சென்றுள்ளனர். முதல்வர் யார் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூரில் 32 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தில்லியில் பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்த பைரன் சிங், பிஸ்வஜித் சிங் ஆகியோர் இன்று இம்பாலுக்கு திரும்பியுள்ளனர். இம்பாலுக்கு சென்ற மத்திய அமைச்சர்கள், உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு முதல்வர் யார் என்பதை அறிவிப்பார்கள். 

முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்காத நிலையிலும் முதல்வர் பைரன் சிங் தலைமையில்தான் பாஜக தேர்தலை சந்தித்தது. பைரன் சிங்கை ஒப்பிடுகையில் பிஸ்வஜித் சிங் பாஜகவில் நீண்ட காலம் இருந்திருந்தாலும், கடந்த 2017 தேர்தலில் முதல்வராக பைரன் சிங்கே அறிவிக்கப்பட்டார். 

மணிப்பூரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com