முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அணையில் நீரைத் தேக்கும் அளவுக்கு முதலில் தீர்வு: உச்சநீதிமன்றம் கருத்து

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்புடைய வழக்கில், எவ்வளவு நீரைத் தேக்க முடியும் என்ற கேள்விக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்புடைய வழக்கில், எவ்வளவு நீரைத் தேக்க முடியும் என்ற கேள்விக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
 முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கும் விவகாரம் தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 அப்போது, கேரள அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி முன்வைத்த வாதம்:
 தற்போதுள்ள அணையின் கீழ்ப்பகுதியில் புதிய அணை அமைப்பதற்கான நடைமுறை தொடங்கப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் மேல்நிலை நீர்மட்ட அளவு 142 அடியாக இல்லாமல், 140 அடியாகப் பராமரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரமானது அணையின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். தற்போதுள்ள சூழலில் அணை பாதுகாப்பாக இல்லை. மேலும், மேற்பார்வைக் குழுவை மாற்றி அமைத்து, செயல்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும். இந்தக் குழுவில் கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் தரப்பில் தொழில்நுட்ப உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும் என்பதுதான் கேரள அரசின் யோசனை.
 கேரள அரசைப் பொருத்தவரை, புதிய அணை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். இந்தப் புதிய அணையை தற்போதுள்ள அணையின் கீழ்ப் பகுதியில் கட்டுவதுதான் நீண்ட காலத்துக்குரிய சரியான தீர்வாக அமையும். இந்த அணை தயாரானதும், ஏற்கெனவே உள்ள அணையின் செயல்பாடு நிறுத்தப்பட்டு புதிய அணை செயல்பாட்டுக்கு வரும். அணை விவகாரத்தில் "இன்ஸ்ட்ருமென்டேஷன்' வழிமுறைதான் அணையைப் பாதுகாக்கும் ஒரே வழியாகும். அணையின் பாதுகாப்பு என்பது நீர் தேக்கத்தில் உள்ள நீர்மட்ட உயரத்தைப் பொருத்ததாக உள்ளது. இதனால், பருவமழைக் காலத்தில் அணையின் நீர்தேக்கும் உச்சபட்ச அளவு 140 அடியாக இருக்க வேண்டும். ஆனால், 142- அடிக்கு மேல் தேக்கிவைக்கப்படுகிறது.
 சம்பந்தப்பட்ட அணைப் பகுதியில் 2017-ஆம் ஆண்டில் இருந்தே பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருவது முக்கியப் பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால், இந்த விவகாரத்தை முடிவு செய்வதில் இந்த அம்சமும் பரிசீலிக்கப்பட வேண்டும். பருவமழையின் உச்சகட்டத்தில் மேல்நிலை நீர்மட்டம் 140 அடியாக இருக்க வேண்டும், 142 அடியாக இருக்கக்கூடாது. பருவமழை தொடர்ந்தால் , நீர்மட்டம் 142 அடியைத் தாண்டிவிடுகிறது. இது இரு மாநிலங்களுக்கு இடையேயான விவகாரமல்ல என்றார் அவர்.
 கேரள அரசுத் தரப்பு வாதத்தின் போது நீதிபதிகள் அமர்வு கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்பதால், நீர் விநியோகம் குறித்து தற்போது நாங்கள் முடிவு செய்யவில்லை. இதில் கவனிக்கப்பட வேண்டிய முதல் கேள்வியே எந்த அளவு தண்ணீரை அணை தாங்கும் என்பதுதான். அணையின் பாதுகாப்பு குறித்து முடிவு செய்வதற்கு "ரூல் கர்வ்' எனும் ஒரு நீர் ஆண்டில் எந்தந்த நாள்களில் எவ்வளவு நீரைத் தேக்குவது என்பது மிகவும் முக்கியமான விவகாரமாக இருக்கலாம்.
 கேரள அரசின் தரப்பில் நான்கு விஷயங்கள், அதாவது நீர்மட்ட உயரம், நீர் வெளியேற்றம் மற்றும் அதற்கான வழிமுறைகள், அணையின் கண்காணிப்பு விஷயங்களை நவீனமயமாக்குதல், அணையின் வழக்கமான மேற்பார்வை மற்றும் பராமரிப்பு ஆகிய விவகாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அணை கோரும் விவகாரத்தில் மத்திய அரசின் இருப்பும் அவசியமாகிறது. நீர்மட்டத்தை உயர்த்திப் பராமரிக்கும் விவகாரம் உச்சநீதிமன்றத்தால் முன்பு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. அது முடிவு செய்யப்பட்டால், சூழ்நிலைகளில் மாற்றம் இல்லாதபோது, அதை ஏன் மாற்ற வேண்டும்?
 இந்த விவகாரம் மொத்தத்தில் ஓர் எதிர்மறை வழக்கு அல்ல. உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் என்ன என்பதைப் பார்த்து மேலே செல்ல வேண்டியதாக உள்ளது. நாங்கள் இந்த விவகாரத்தில் அரசியல் பிரச்னைகளை இங்கு முடிவு செய்யப் போவதில்லை. இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்படும் என்றனர்.
 இந்த வழக்கில் கேரள அரசின் தரப்பில் வியாழக்கிழமையும் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com