புதிய சவாலுக்கு தயாராகும் அகிலேஷ்...யோகிக்கு நெருக்கடி

சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் கர்ஹால் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றிபெற்றதையடுத்து மக்களவை உறுப்பினர் பதவியை அகிலேஷ் யாதவ் ராஜிநாமா செய்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்படவுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக அகிலேஷை அக்கட்சியை சேர்ந்த 111 எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி தலைவர்களை அகிலேஸ் சந்திக்கவுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் மைன்பூரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றிபெற்றதையடுத்து மக்களவை உறுப்பினர் பதவியை அகிலேஷ் யாதவ் ராஜிநாமா செய்தார். 

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசத்தில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை கணக்கில் கொண்டு சட்டப்பேரவையில் பாஜகவுக்கு அழுத்தம் தர அகிலேஷ் திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ் கடும் சவால் அளித்திருந்தார். இருப்பினும், 403 இடங்கள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் அவரது கட்சி 111 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், வரலாற்றிலேயே அதிக வாக்கு வங்கியை திரட்டி அக்கட்சி சாதனை படைத்துள்ளது.

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் ஓடி விட்டார் என்ற பெயரை தவிர்ப்பதற்காகவும் வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காகவும் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்வதே அவசியம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 

மாநில அரசியலில் அகிலேஷ் ஆர்வம் காட்டவில்லை எனில் கட்சியின் முக்கிய வாக்கு வங்கியான யாதவர்களும் இஸ்லாமியர்களும் கட்சியை விட்டு சென்றுவிடுவார்கள் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com