
அமித் ஷா (கோப்புப் படம்)
அரசுமுறை பயணமாக மேற்கு வங்காளத்திற்கு 3 நாள் பயணம் மேற்கொள்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
மே 4-ம் தேதி மாலை கொல்கத்தா சென்றடையும் ஷா, மே 5-ம் தேதி ஹிங்கல்கஞ்சில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். பின்னர் அவர் சிலிகுரி சென்று ரயில்வே மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அன்று மாலை பல்வேறு சமூகத் தலைவர்களையும் சந்திக்கிறார்.
மே 6-ம் தேதி டின் பிகாவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். பிற்பகலில் கொல்கத்தாவில் பாஜகவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகளையும் அவர் சந்திக்கிறார்.
பின்னர், விக்டோரியா நினைவிடத்தில் கலாசார அமைச்சக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அமித்ஷா, மாநில தலைநகரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்குச் செல்கிறார்.
மேற்கு வங்கத்தில் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போது, மாநிலத்தில் கட்சியை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அவர் ஆலோசிப்பார். கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
இருப்பினும், கட்சி எல்.எல்.ஏ.க்கள் சிலர் அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த எந்த இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெறவில்லை.
அசன்சோல் மக்களவை இடைத்தேர்தலில் சமீபத்திய தோல்விக்குப் பிறகு தீவிரமடைந்த பழைய காவலர்களுக்கும் புதியவர்களுக்கும் இடையே மாநில பிரிவில் நடந்து வரும் உட்கட்சி மோதல் குறித்து ஷா விவாதிப்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.