
இந்தியா மற்றும் ஜெர்மனி பிரதமர்கள்
இந்தியா, ஜெர்மனி இடையிலான பசுமை மற்றும் நிலைத்தன்மை வளர்ச்சி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் சோல்ஸ் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 3 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக இன்று (திங்கள்கிழமை) ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் சோல்ஸ் வரவேற்றார். இதன்பிறகு, இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின்போது, இந்தியா, ஜெர்மனி இடையிலான ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறித்து உரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியா, ஜெர்மனி இடையிலான 6-வது இருதரப்பு அரசுமுறைப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஜெர்மனியுடன் மட்டுமே இந்தியா இந்த சந்திப்பை நடத்துகிறது. இருநாட்டுப் பிரதமர்கள் தலைமையிலான இந்த சந்திப்பில் இருநாட்டின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தியா, ஜெர்மனி இடையிலான ஒத்துழைப்பை புதிய பகுதிகளிலும் விரிவாக்குவது தொடர்பாக இந்த ஆலோசனையின்போது மறுஆய்வு செய்யப்பட்டன.
பேச்சுவார்த்தையின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் சோல்ஸ் ஆகியோர் பசுமை மற்றும் நிலைத்தன்மை ஆற்றல் கூட்டமைப்பில் கையெழுத்திட்டனர்.
இதன்பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
"2022-இல் எனது முதல் பயணம் ஜெர்மனியில் நிகழ்வதில் எனக்கு மகிழ்ச்சி. வெளிநாட்டுத் தலைவர்களுடன் எனது முதல் தொலைபேசி உரையாடலும் நண்பர் ஒலாஃப் சோல்ஸுடன் நிகழ்ந்தது. இந்தியா, ஜெர்மனி இடையே இருதரப்பு அரசுமுறைப் பேச்சுவார்த்தை நடத்துவது இருநாடுகளுக்கிடையிலான உறவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது.
உலக அமைதி மற்றும் நிலைத்தன்மை எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளது என்பதையும் அனைத்து நாடுகளும் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பில் உள்ளது என்பதையும் சமீபத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. உக்ரைன் நெருக்கடி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வைத் தரும் என்பதை நாம் தெரிவித்துள்ளோம். இந்தப் போரில் யாருமே வெற்றியாளர் ஆக முடியாது என்பதை நாங்கள் நம்புகிறோம்.
பசுமை மற்றும் நிலைத்தன்மை வளர்ச்சியில் இந்தியா, ஜெர்மனி இடையிலான கூட்டமைப்பை இன்று தொடங்குகிறோம். இந்தியாவின் பசுமை வளர்ச்சித் திட்டத்துக்கு கூடுதல் நிதியுதவியுடன் ஆதரவு தெரிவிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது" என்றார் பிரதமர் மோடி.