
நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் கரோனா தொற்றால் 3,324 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை வரை நாடு முழுவதும் புதிதாக 3,324 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றால் சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 19,092-ஆக அதிகரித்துள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 0.71 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.68 சதவீதமாகவும் உள்ளது. தேசிய அளவில் குணமடைவோா் விகிதம் 98.74 சதவீதமாகவுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4 போ் உயிரிழந்துள்ளனா். ஆனால், விடுபட்ட 36 பேரின் உயிரிழப்புகள் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் கரோனா இறப்பு எண்ணிக்கை 5,23,843-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 189.17 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.