
கோப்புப்படம்
நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை கடந்த வாரத்தில் 10.77 ஜிகா வாட்டாக அதிகரித்தது.
நாட்டில் வெப்பஅலை அதிகரித்துள்ளதன் காரணமாக மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதே வேளையில், நிலக்கரித் தட்டுப்பாடு, அனல்மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின்சார உற்பத்தி குறைந்தது. அதன் காரணமாக பல மாநிலங்கள் மின்வெட்டு பிரச்னையைச் சந்தித்து வருகின்றன.
அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரியை விரைந்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தேசிய மின்சார அமைப்பு செயல்பாட்டுக் கழகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) 5.24 ஜிகா வாட்டாக இருந்த மின்சாரப் பற்றாக்குறை, திங்கள்கிழமை (ஏப். 25) 5.24 ஜிகா வாட்டாக அதிகரித்தது.
செவ்வாய்க்கிழமை 8.22 ஜிகா வாட்டாகவும், புதன்கிழமை 10.29 ஜிகா வாட்டாகவும் அதிகரித்த மின்சாரப் பற்றாக்குறை, வியாழக்கிழமை (ஏப். 26) 10.77 ஜிகா வாட்டாக உச்சம் தொட்டது. வெள்ளிக்கிழமை மின்சாரப் பற்றாக்குறையானது 8.12 ஜிகா வாட்டாகக் குறைந்தது.
மின்சாரப் பற்றாக்குறை அதிகரித்த அதே வேளையில், மின் விநியோகம் கடந்த வாரத்தில் 3 முறை உச்சம் தொட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை 201.65 ஜிகா வாட்டாக மின் விநியோகம் உச்சத்தில் இருந்தது. இது கடந்த வியாழக்கிழமை 204.65 ஜிகா வாட்டாகவும், வெள்ளிக்கிழமை 207.11 ஜிகா வாட்டாகவும் மீண்டும் உச்சம் தொட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி மின் விநியோகம் 200.53 ஜிகா வாட்டாக இருந்ததே கடந்த வாரம் வரை உச்சமாக இருந்தது. தற்போது ஒரே வாரத்தில் 3 முறை புதிய உச்சத்தை மின் விநியோகம் எட்டியுள்ளது. நாட்டில் வெப்ப அலை தொடா்ந்து அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மின்சாரத் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
ஜூன் வரை மின்சாரத் தேவை 215 முதல் 220 ஜிகா வாட்டாக இருக்குமென மத்திய எரிசக்தித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G