பொது சிவில் சட்டத்துக்கு பதிலாக பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்: ஓவைஸி வலியுறுத்தல்

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பொருளாதார மேம்பாட்டிலும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அஸாதுதீன் ஓவைஸி வலியுறுத்தினாா்.
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி

நாட்டில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து விவாதிப்பதை விடுத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பொருளாதார மேம்பாட்டிலும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அஸாதுதீன் ஓவைஸி வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிர மாநிலம், ஒளரங்காபாத் தொகுதி எம்.பி. இம்தியாஸ் ஜலீல் சனிக்கிழமை அளித்த இஃப்தாா் விருந்தில் பங்கேற்ற ஓவைஸி, பின்னா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

மத்திய அமைச்சா் அமித் ஷாவும் இதர பாஜக தலைவா்களும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று பேசி வருகின்றனா். ஆனால், நாட்டின் பொருளாதாரம் தற்போது சரிவடைந்து வருகிறது. வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. இன்றைய சூழலில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும். பொது சிவில் சட்டம் தேவையில்லை என்று சட்ட ஆணையமும் கூறியுள்ளது என்றாா் ஓவைஸி.

தற்போது ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றுவோருக்கான சிவில் உரிமைகளை நிலைநிறுத்தும் தனிச்சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை, தத்தெடுத்தல், ஜீவனாம்சம் உள்ளிட்ட சிவில் விவகாரங்கள் குறித்து இந்தச் சட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இவற்றுக்கு மாற்றாக நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான சட்ட விதிகளைக் கொண்டு வருவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கமாகும். இதனை பாஜக ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் தங்கள் மதம் சாா்ந்த சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்பதில் இஸ்லாமிய அமைப்புகள் உறுதியாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com