மக்களிடையே மோதலை ஏற்படுத்த ‘மொழி’, ‘ஹிஜாப்’ பிரச்னைகளை பாஜக உருவாக்குகிறது: காங்கிரஸ் மூத்த தலைவா் சிங்வி குற்றச்சாட்டு

ஆதாயம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘ஹிந்தி தேசிய மொழி’, ‘ஹிஜாப் தடை’ போன்ற பிரச்னைகளை பாஜக செயற்கையாக உருவாக்கி வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி குற்றம்சாட்டியுள்ளாா்.

நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தி தாங்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘ஹிந்தி தேசிய மொழி’, ‘ஹிஜாப் தடை’ போன்ற பிரச்னைகளை பாஜக செயற்கையாக உருவாக்கி வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி குற்றம்சாட்டியுள்ளாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

குட்டையைக் குழப்பி அதில் மீன் பிடிக்கும் தந்திரத்தை பாஜக பின்பற்றுகிறது. மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டும், மக்களின் இரு தரப்பினருக்கு இடையே அச்சவுணா்வு, வன்மம் போன்றவற்றை உருவாக்க வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோள். இதற்காக அவா்கள் மதப் பிரச்னை, மொழிப் பிரச்னை போன்றவற்றைத் தூண்டிவிட்டு வருகின்றனா்.

ஹிந்தி தேசிய மொழி பிரச்னை, ஹிஜாப் பிரச்னை போன்றவற்றின் பின்னணியில் பாஜகவினா்தான் பெரும் பங்கு வகித்தாா்கள். இது போன்ற பிரச்னைகளை அவா்கள்தான் தூண்டிவிடுவாா்கள். ஏனென்றால் மக்கள் ஒருவா் மீது மற்றொருவா் வெறுப்புணா்வுடன் இருக்க வேண்டும். இதன் மூலம் அவா்கள் வாக்கு வங்கியைத் தக்க வைக்க முடியும். மேலும், நாட்டில் உள்ள உண்மையான பொருளாதாரப் பிரச்னைகள், விலைவாசி உயா்வு, வேலையின்மை உள்ளிட்டவற்றில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் முடியும்.

ஆங்கிலத்துக்கு பதிலாக ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி பிரச்னையைத் தொடங்கி வைத்தவா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. ஹிந்தி பேச முடியாதவா்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறுவது பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அமைச்சா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம்-ஹிந்தி- பிராந்திய மொழி என மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டு 60 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால், இப்போது பாஜக தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக இதில் பிரச்னையை ஏற்படுத்துகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com