இந்தியாவுக்குள் நுழைந்த எக்ஸ்இ வகை கரோனா: ஆனால்..

ஒமைக்ரான் வகை கரோனாவின் உருமாறிய எக்ஸ்இ வகை கரோனா வைரஸ் நுழைந்துவிட்டதை ஐஎன்எஸ்ஏசிஓஜி எனப்படும் இந்தியன் சார்ஸ்-கோவ்2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம் ஆய்வகங்களின் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.
இந்தியாவுக்குள் நுழைந்த எக்ஸ்இ வகை கரோனா: ஆனால்..
இந்தியாவுக்குள் நுழைந்த எக்ஸ்இ வகை கரோனா: ஆனால்..


புது தில்லி: இந்தியாவுக்குள், ஒமைக்ரான் வகை கரோனாவின் உருமாறிய எக்ஸ்இ வகை கரோனா வைரஸ் நுழைந்துவிட்டதை ஐஎன்எஸ்ஏசிஓஜி எனப்படும் இந்தியன் சார்ஸ்-கோவ்2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம் ஆய்வகங்களின் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.

குஜராத், கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கரோனவின் பல மடங்கு உருமாறிய பிஏ.1 மற்றும் பிஏ.2 வகை ஒமைக்ரான் தொற்றுகள் பரவியிருப்பது ஆய்வகப் பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ஒமைக்ரான் எக்ஸ்இ வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து மத்திய சுகாதாரத் துறை இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

ஏப்ரல் 25ஆம் தேதி நாளிட்டு, ஐஎன்எஸ்ஏசிஓஜி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் ஒரு எக்ஸ்இ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்த மாநிலத்தில் அது உறுதி செய்யப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

இன்றைய தேதிப்படி, இந்தியாவில் ஒமைக்ரான் பிஏ.2 தான் மிக அதிக வேகத்துடன் பரவும் வைரஸாக உள்ளது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் திடீரென கரோனா அதிகரிக்கவும் இந்த வகை வைரஸ்தான் காரணமாகக் கூறப்பட்டது.

இதுவரை பிஏ2.10 முதல் பிஏ.2.12 வரை ஒமைக்ரான் தீநுண்மியின் மரபணு வரிசைமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை, இந்த வகை வைரஸ்கள், கரோனா தீவிரமடையக் காரணமாக அமையவில்லை என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒமைக்ரான் எக்ஸ்இ வகை கரோனா கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தென்னாப்ரிக்காவிலிருந்து வந்த 50 வயது ஆடை வடிவமைப்பாளருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தெரவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எக்ஸ்இ வகை கரோனா இந்தியாவில் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை உடனடியாக மறுப்புத் தெரிவித்திருந்தது.

இதற்கு 3 நாள்களுக்குப் பிறகு குஜராத்திலும் எக்ஸ்இ வகை கரோனா உறுதி செய்யப்பட்டது. கேரளத்திலும் ஏப்ரல் 22ஆம் தேதி இதே வகை கரோனா கண்டறியப்பட்ட நிலையில், இறுதியாக இந்தியாவுக்குள் ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை கரோனா நுழைந்துவிட்டதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

எனினும், இது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தாது என்பது மட்டும் இதுவரை நடந்த ஆய்வுகளில் தெரிய வந்திருப்பது சற்று ஆறுதலைத் தருவதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com