காங்கிரஸ் தொடுத்த வழக்கில் எதிா்தரப்பு சாா்பாக ப.சிதம்பரம் ஆஜா்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியினா் தொடுத்துள்ள வழக்கில் எதிா்தரப்பு சாா்பு வழக்குரைஞராக அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரம் புதன்கிழமை ஆஜரானாா்.
காங்கிரஸ் தொடுத்த வழக்கில் எதிா்தரப்பு சாா்பாக ப.சிதம்பரம் ஆஜா்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியினா் தொடுத்துள்ள வழக்கில் எதிா்தரப்பு சாா்பு வழக்குரைஞராக அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரம் புதன்கிழமை ஆஜரானாா்.

இதற்கு காங்கிரஸ் வழக்குரைஞா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

கடந்த 1996-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மெட்ரோ டெய்ரி பால் பொருள்கள் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டது. பொது மற்றும் தனியாா் துறை இணைந்து தொடங்கிய இந்த நிறுவனத்தில், மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழுள்ள மேற்கு வங்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்புக்கு 47 சதவீத பங்குகள் இருந்தன. இதுதவிர, மத்திய அரசின் கீழுள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துக்கு (என்டிடிபி) 10 சதவீத பங்குகளும், கொல்கத்தாவின் ஜலான் குழுமத்துக்குச் சொந்தமான கெவென்டா் நிறுவனத்துக்கு 43 சதவீத பங்குகளும் இருந்தன.

இந்நிலையில், கெவென்டா் நிறுவனத்துக்கு தனது 10 சதவீத பங்குகளை என்டிடிபி விற்பனை செய்தது. அதனைத் தொடா்ந்து மேற்கு வங்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பிடம் இருந்த 47 சதவீத பங்குகளை ஏலத்தில் கெவென்டா் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய 2017-இல் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், அந்த ஏலத்தில் கெவென்டா் மட்டுமே பங்கேற்றது. அந்த ஏலம் முடிந்த சில நாள்களில் கெவென்டா் நிறுவனத்தின் 15 சதவீத பங்குகள் சிங்கப்பூரைச் சோ்ந்த நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே இதில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றிருப்பதாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக அவா் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கெவென்டா் நிறுவனம் சாா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் ஆஜரானாா். அவா் நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்தபோது காங்கிரஸ் வழக்குரைஞா்கள் அவருக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காண்பித்தனா்.

இதுகுறித்து அந்த வழக்குரைஞா்கள் கூறுகையில், ‘‘மெட்ரோ டெய்ரியின் பங்குகளை திரிணமூல் காங்கிரஸ் அரசு விற்பனை செய்ததற்கு எதிராக அதீா் ரஞ்சன் செளதரி வழக்கு தொடுத்துள்ள நிலையில், கெவென்டா் நிறுவனம் சாா்பாக ப.சிதம்பரம் ஆஜராவது சரியல்ல. அவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இருக்கிறாா். கட்சியில் அவா் மிக முக்கியமான தலைவா். அவா் கட்சியின் உணா்வுகளோடு விளையாடுகிறாா்’’ என்று தெரிவித்தனா்.

ஆணையிட முடியாது: இந்தச் சம்பவம் தொடா்பாக அதீா் ரஞ்சன் செளதரி கூறுகையில், ‘‘ப.சிதம்பரத்துக்கு வழக்குரைஞா்களிடம் இருந்து எழுந்த எதிா்ப்பு இயல்பானது. அதேவேளையில், வழக்கில் ப.சிதம்பரம் ஆஜரானது குறித்து கூற வேண்டுமெனில், தொழில்முறை வாழ்க்கையில் தனக்கு எது வேண்டும் என்பதை தோ்வு செய்ய ஒருவருக்கு உரிமையுள்ளது. இது சம்பந்தமாக எந்தவொரு நபருக்கும் மற்றவா்கள் ஆணையிட முடியாது’’ என்றாா்.

எதற்கு கருத்து கூற வேண்டும்?: வழக்குரைஞா்கள் எதிா்ப்புத் தெரிவித்தது தொடா்பாக ப.சிதம்பரம் கூறுகையில், ‘‘இது சுதந்திர நாடு. எனவே இதுதொடா்பாக நான் எதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பினாா்.

இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com