'மோசமான சரித்திரம்': 13 ஆண்டு சிறைக்குப் பின் விடுதலை.. மருத்துவ மாணவரின் கண்ணீர் கதை

மத்திய பிரதேசத்தில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பழங்குடியினத்தைச் சோ்ந்த மருத்துவ மாணவர், குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்திருக்கிறது உயா்நீதிமன்றம்.
'மோசமான சரித்திரம்': 13 ஆண்டு சிறைக்குப் பின் விடுதலை.. மருத்துவ மாணவரின் கண்ணீர் கதை
'மோசமான சரித்திரம்': 13 ஆண்டு சிறைக்குப் பின் விடுதலை.. மருத்துவ மாணவரின் கண்ணீர் கதை

மத்திய பிரதேசத்தில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பழங்குடியினத்தைச் சோ்ந்த மருத்துவ மாணவர், குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்திருக்கிறது உயா்நீதிமன்றம்.

13 ஆண்டுகள் சிறையில் இருந்த அவருக்கு மாநில அரசு இழப்பீடாக ரூ.42 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பழங்குடியினத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சந்திரேஷ் மார்ஸ்கோலை குற்றவாளியாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு விசாரணையை நடத்தி முடித்த காவல்துறையினரை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. தவறாக ஒருவரை குற்றம்சாட்டுவது ஒன்றே குறிக்கோளாக இருந்துள்ளது என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2008-ஆம் ஆண்டு போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த சந்திரேஷ் மாா்ஸ்கோல் தனது தோழியைக் கொலை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டாா். 

இதில் கீழமை நீதிமன்றத்தில் அவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அங்கு நடைபெற்ற விசாரணையில் இந்தக் கொலை வழக்கில் காவல் துறையினா் சந்திரேஷ்தான் குற்றவாளி என்ற நோக்கில் விசாரணை நடத்தியதும், உண்மையான குற்றவாளியான மற்றொரு மருத்துவரை பாதுகாத்ததுடன் அவரை வழக்கின் சாட்சியாக சோ்த்ததும் தெரியவந்தது. இந்த விசாரணைக்கு நடுவே 13 ஆண்டுகள் சந்திரேஷ் சிறையில் இருந்தாா். இப்போது அவருக்கு 34 வயதாகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் இறுதித் தீா்ப்பை வழங்கிய உயா்நீதிமன்றம், ‘மனுதாரா் 13 ஆண்டுகள் நீதிக்காக சிறையில் காத்திருந்துள்ளாா். மேலும் தனது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தை சிறையில் கழித்துள்ளாா். அதனை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அவா் மருத்துவம் படித்து வந்தவா். அவா் படிப்பை முடித்து பணியைத் தொடங்கி இருந்தால் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ.3 லட்சமாவது சம்பாதித்திருக்க முடியும். எனவே, அவருக்கு ரூ.42 லட்சத்தை மாநில அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். 90 நாள்களுக்குள் இத்தொகையை அவரிடம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

மருத்துவராக சேவை செய்ய வேண்டும் என்ற கனவுகளுடன் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த சந்திரேஷ் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டு, கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்படுகிறார். அது முதல் விசாரணைக் காவல், நீதிமன்றக் காவல் என சரியாக 4,740 நாள்கள் அவர் சிறையில் கழித்துள்ளார். அதுவும் செய்யாதக் குற்றத்துக்காக.

சந்திரேஷ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன் வைத்துக் கூறியதாவது, மனுதாரர், கோண்ட் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். அரசியலமைப்பு அளித்த வசதிகளைப் பயன்படுத்தி அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவர் என்ற கனவின் விளிம்பில், எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த போது, மருத்துவராக சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் அலையாய் அடித்துக் கொண்டிருந்த போது, தனக்கு முழு ஆதரவளித்த தனது குடும்பத்துக்கும், மற்றவர்களுக்கும், தனது இன மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்திருக்க வேண்டியவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், சந்திரேஷின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் குழப்பத்துக்குள் தள்ளப்பட்டுவிட்டது என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கில் கிடைத்த தகவல் என்னவென்றால், 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மருத்துவர் ஹேமந்த் வெர்மா காவல்துறையிடம் கூறிய வாக்குமூலத்தில், சந்திரேஷ் தன்னிடமிருந்து காரை எடுத்துக் கொண்டு சென்றதாகவும், இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக தான் நினைத்ததாகவும் கூறியிருந்தார். மூன்று நாள்களுக்குப் பின் சந்திரேஷின் பெண் தோழியின் உடல் பச்மார்ஹி பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் சந்திரேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டு, கொலை செய்த ஹேமந்த் வெர்மா சாட்சியாக மாறுகிறார். 2009ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இந்த கொலை வழக்கில் சந்திரேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com