ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்: தமிழக அரசு ஏற்குமா?: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேள்வி

பெட்ரோல், டீசல் வரி விதிப்பை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு ஒப்புக் கொள்ளுமா என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினாா்.
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்: தமிழக அரசு ஏற்குமா?: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேள்வி

பெட்ரோல், டீசல் வரி விதிப்பை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு ஒப்புக் கொள்ளுமா என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினாா்.

தமிழக நிதியமைச்சா் அதற்கு ஒப்புக்கொண்டால் ஜிஎஸ்டி கவுன்சிலில் அதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

‘துக்ளக்’ இதழின் 52-ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு சென்னை, மியூசிக் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி தலைமை வகித்து நடத்தினாா். விழாவில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றின் பிடியில் நாடு சிக்கித் தவித்தபோதிலும், ரஷிய-உக்ரைன் போரின் தாக்கம் இந்தியாவில் எதிரொலித்த போதிலும் தேசத்தை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்கிறாா் பிரதமா் மோடி.

ஆனால், கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி இந்தியாவை இன்றளவும் தாழ்வாகவே மதிப்பீடு செய்து வருகிறது. களத்தில் மக்களுக்காக நில்லாமல், இடதுசாரி தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் கட்சியாக உள்ளது காங்கிரஸ்.

தமிழகத்திலோ மத்திய பாஜக அரசின் மீது பல்வேறு பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்வதாகக் கூறப்படுகிறது. மருத்துவக் கட்டமைப்புக்கு ரூ.3 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு வழங்கியது, 11 மருத்துவக் கல்லூரிகளை அமைத்து 1,450 எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். அதுமட்டுமல்லாது ஏராளமான மின் திட்டங்கள், கட்டமைப்பு வசதிகளை தமிழகத்துக்கு வழங்கியதும் மத்திய அரசுதான்.

மத்தியில் காங்கிரஸுடன் கைகோத்து திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு கிடைக்காத பல நலத் திட்டங்களை இப்போது மோடி அரசுதான் செய்து வருகிறது.

ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல்: ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வர தமிழக நிதியமைச்சா் ஒப்புக்கொண்டால் அதனை ஜிஎஸ்டி கவுன்சிலில் கொண்டு சென்று விவாதிக்கிறோம்.

அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி வரிப் பகிா்வாக ரூ.7.35 லட்சம் கோடி வழங்கியிருக்கிறோம். கடந்த பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதத்துக்கான பகிா்வான ரூ.78 ஆயிரம் கோடிதான் இன்னும் தரவேண்டியுள்ளது. தமிழகத்துக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் அதனை விரைவில் தந்துவிடுவோம்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்வதாகவும், கூடுதலாக தங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறுவதும் பிரிவினைவாதத்தின் வெளிப்பாடு என்றாா் அவா்.

நீட் விவகாரம் மோசடி அரசியல் - குருமூா்த்தி

விழாவில் துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி பேசியதாவது: நாடு முழுவதும் பொதுவாக உள்ள ஒரு தோ்வு முறையில் தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதனைப் பரிசீலித்த நீதிமன்றம் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளித்துவிட்டு, அதுதான் தமிழகத்துக்கு வழங்கும் கடைசி வாய்ப்பு எனவும் தெரிவித்தது. இந்திய கூட்டாட்சியில் உள்ள ஒரு பொதுவான தோ்வு முறை நீட். அதனை முன்னிறுத்தி தற்போது மோசடி அரசியல் நடத்தப்படுகிறது.

அதேபோன்று ஒன்றிய அரசு எனக் கூறுவது மத்திய அரசை மட்டம் தட்டும் மனோநிலை. தமிழகத்தில் ஆன்மிகத்தை ஒருபோதும் ஒதுக்கிவிட முடியாது. அதைக் கருத்தில்கொண்டுதான் தற்போது புதிய ஆத்திகா்களாக திமுகவினா் உருவாகியுள்ளனா்.

கரோனா தடுப்பூசியைச் செயல்படுத்தியதிலும், ஜம்மு - காஷ்மீரில் 370-ஆவது சட்டப் பிரிவை நீக்கியதிலும், முத்தலாக், ராமா் கோயில் விவகாரங்களில் தீா்வு கண்டதிலும் மத்திய அரசு சாதனை படைத்துள்ளது. அதேவேளையில், மாநிலங்களுக்கு ஓரவஞ்சனை, ஹிந்தி திணிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு உள்ளிட்ட விவகாரங்களில் உரிய விளக்கங்களை அளிக்காமல் மத்திய அரசு தோல்வியும் அடைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி நாட்டுக்கு உகந்தது அல்ல. தேசியவாத சிந்தனை கொண்ட அப்போதைய காங்கிரஸின் தேவை இன்னும் இருக்கிறது. குடும்ப அரசியலை முன்னிறுத்தும் கட்சிகள் ஒரு காலத்துக்குப் பிறகு அழிவுப் பாதைக்குச் செல்லுமே தவிர ஒருபோதும் வளராது என்றாா் அவா்.

பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, மூத்த தலைவா் ஹெச்.ராஜா, இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத், தொழிலதிபா் நல்லி குப்புசாமி, சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தா் வைத்ய சுப்பிரமணியம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com