
ரயில்களில் குழந்தைகளுக்கு படுக்கை வசதி: எதைச் செய்தாலும் விமர்சனம் வரும்தானே?
ரயில்களில் குழந்தைகளுக்கு என தனிப் படுக்கையை ரயில்வே துறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வடக்கு ரயில்வேயின் லக்னெள, தில்லி மண்டலம் சாா்பில் அன்னையா் தினத்தையொட்டி மே 8-ஆம் தேதி லக்னெள மெயிலின் மூன்றடுக்கு ஏசி பெட்டியில், தாயாா் தங்கள் குழந்தைகளுடன் வசதியாகத் தூங்கும் வகையில், குழந்தைகளுக்கு என தனிப் படுக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு இந்த வசதி நிச்சயம் பேருதவியாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், சில விமர்சனங்களும் வந்துள்ளன.
இந்த படுக்கைகளின் புகைப்படங்கள் வடக்கு ரயில்வேயின் ட்விட்டா் பக்கத்திலும் வெளியிடப்பட்டன. அதில், குழந்தைகளுக்கான இந்தப் படுக்கை எளிதில் மடக்கக் கூடியது, தடுப்புகளைக் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. கோடீஸ்வர கருமியாக வாழும் பெண்: விவாகரத்து செய்த கணவர் சொன்ன பதில்
மேலும் குழந்தை தூங்கும்போது கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக கீழ்ப் படுக்கையுடன் குழந்தைகளுக்கான படுக்கைகள் இணைக்கப்பட்டு, அதில் பட்டைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தாத சமயத்தில், கீழ்ப்படுக்கையின் அடியில் உள்ள தடுப்பில் வைத்துவிடலாம். பயணிகள் மீண்டும் பயன்படுத்த வேண்டுமெனில், எளிதில் வெளியே எடுத்துவிடலாம்.
இதற்கு சுட்டுரையில் சில பயணிகள் தங்களது விமரிசனங்களை தெரிவித்துள்ளனர். அதில், பொதுவாக குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளை உள்பக்கமாக கிடத்திக் கொண்டுதான் உறங்குவார்கள். நிச்சயம் வெளிப்பக்கத்தில் படுக்க வைக்க விரும்ப மாட்டார்கள். பாதுகாப்பு இல்லை என்று கருதுவார்கள். எனவே, அடுத்த முறை தாய்மார்களுக்கான படுக்கையை முழுவதுமாக விரிவுசெய்து கொடுக்கலாம் என்று தனது கருத்தைக் கூறியுள்ளார்.
சிலர் இது சக பயணிகளுக்கு பாதகமாக அமையலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பலரும், ரயிலில் தங்களது உடைமைகள் காணாமல் போவது போல குழந்தைகள் காணாமல் போக எந்த பெற்றோரும் விட மாட்டார்கள். எனவே, குழந்தைகளை உள்பக்கமாகவே படுக்க வைக்க தாய்மார்கள் எண்ணுவார்கள் என்று ரயில்வேயில் பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நல்ல முயற்சிதான். ஆனால், மேல் படுக்கையில் இருக்கும் நபர் குடிநீர் பாட்டிலையோ அல்லது, தேநீர் கோப்பையையோ தவறவிட்டால் குழந்தையின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சிலரோ இது நல்ல யோசனையாக இல்லை. வெற்றிபெறாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Still remember this disastrous experiment of putting a Middle Berth in between Side Upper & Lower.
— Sankalp M (@wittysankalp) May 11, 2022
Thank God public opinion was heard then & it was recalled.
Hopefully sense will prevail this time as well... considering the number of children abducted from Trains in India pic.twitter.com/4DIwPaGg8F
பல ஆண்டுகளுக்கு முன்பு, சைட் மிடில் பெர்த் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களின் யோசனைக்குப் பின் திரும்பப் பெறப்பட்டதை புகைப்படத்துடன் இணைத்து, நல்ல வேளை அது மக்களின் கருத்துகளைக் கேட்டு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், இந்த திட்டம் சோதனை முறையில் அறிமுகம் செய்துவிட்டார்கள் என்றும் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.
ரயில்களில் தற்போது குழந்தைகளுக்கு என பிரத்யேக இருக்கைகளோ, படுக்கைகளோ கிடையாது. ஆகையால் குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மாா்கள், பயணச்சீட்டு பரிசோதகரையோ அல்லது சக பயணிகளையோ அணுகி, கீழ்ப்படுக்கைகளை கேட்டுப் பெறும் சூழல் நிலவுகிறது. இதனைப் போக்கும் விதத்தில் ரயில்வே இந்தப் புதிய வசதியை உருவாக்கியுள்ளது. அன்னையா் தினத்தையொட்டி, தாய்மாா்களுக்குப் பரிசாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அறிமுகத் திட்டம் வெற்றி பெறும்பட்சத்தில் நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. அறிமுக நிலையிலேயே சுட்டுரையில் பல எதிர்மறை விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.