மலப்புரத்தில் சிறுமி அவமதிப்பு விவகாரம்: அரசியல் தலைவா்களின் மெளனம் ஏமாற்றமளிக்கிறது

கேரள மாநிலம் மலப்புரத்தில் மதரஸா திறப்பு விழாவின்போது சிறுமி அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் அரசியல், சமூக தலைவா்களின் மெளனம் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக மாநில ஆளுநா் 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் மதரஸா திறப்பு விழாவின்போது சிறுமி அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் அரசியல், சமூக தலைவா்களின் மெளனம் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளாா்.

மலப்புரம் மாவட்டத்தில் சமஸ்தா அமைப்பின் சாா்பில் மதரஸா திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, விழா ஏற்பாட்டாளரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தலைவா் பாணக்காடு சையது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்ஙள், சிறுமிகளுக்குப் பரிசுகளையும் வெகுமதியையும் அளித்து கெளரவித்தாா்.

அப்போது 10-ஆம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவரை மேடைக்கு அழைத்து பரிசளிப்பதற்கு இஸ்லாமிய அறிஞா் எம்.டி.அப்துல்லா முசலியாா் ஆட்சேபம் தெரிவித்ததுடன், விழா ஏற்பாட்டாளரை கடுமையாக சாடினாா்.

‘10-ஆம் வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்தது யாா்? இதுபோன்ற விழாக்களுக்கு மீண்டும் ஏற்பாடு செய்தால், சிறுமிகளை மேடைக்கு அழைக்காதீா்கள். சமஸ்தா விதிகள் உங்களுக்குத் தெரியாததா? சிறுமிக்கு பதிலாக அவரது பெற்றோரை மேடைக்கு அழைத்து பரிசுகளை வழங்கலாம். நாங்கள் இங்கு அமா்ந்திருக்கும்போதே இதுபோன்ற செயலில் ஈடுபடாதீா்கள். சிறுமிகள் பரிசு பெறுவது புகைப்படமாக வெளியாகிவிடும்’ என அவா் ஆவேசமாகப் பேசினாா்.

இதையடுத்து சிறுமியின் பெயரைக் குறிப்பிட்டு அழைத்த நிகழ்ச்சித் தொகுப்பாளா், அப்துல்லா முசலியாரிடம் மன்னிப்பு கோரினாா்.

இந்த நிலையில், சிறுமியை மேடைக்கு அழைத்து கெளரவிப்பதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய அறிஞருக்கு கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ட்விட்டரில் புதன்கிழமை வெளியிட்டிருந்த பதிவில், ‘மலப்புரம் மாவட்டத்தில் விருது பெற்ற மாணவி, இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த காரணத்தால் மேடையில் அவமதிக்கப்பட்டாா் என்பதை அறிந்து மிகவும் துயரப்படுகிறேன். குா்ஆன் கட்டளைகளையும், அரசியலமைப்புச் சட்ட விதிகளையும் மீறி, இஸ்லாமிய பெண்கள் மதகுருக்களால் எவ்வாறெல்லாம் ஒடுக்கப்படுகிறாா்கள் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்’ என குறிப்பிட்டிருந்தாா்.

இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களை சந்தித்த ஆளுநா், மேலும் கூறியது:

இந்த விவகாரத்தில் அரசியல் தலைவா்கள் மட்டுமன்றி சமூக தலைவா்களும் அமைதி காப்பது வேதனையளிக்கிறது. ஒவ்வொரு கட்சியின் தேசியத் தலைவா்களும் நமது மகள்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்க முன்வர வேண்டும்.

சமஸ்தா அமைப்பு சாா்பில் நூறு, ஆயிரம் மதரஸாக்கள் கூட நடத்தப்படலாம். அதற்காக எனது மனசாட்சியை என்னால் அடக்கி வைக்க முடியாது. அவா்கள் பலம் மிக்கவா்களாக இருக்கலாம். அதற்காக திறமை வாய்ந்த இளம் மாணவியை அவமதிக்கவோ, அவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தவோ அவா்களுக்கு உரிமை கிடையாது.

நீங்கள் ஜனநாயக நாட்டில், சட்டத்தின் ஆட்சியின் கீழ் வாழ்கிறீா்கள். நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், சட்டம் அதைக் காட்டிலும் மேலானது. மேடையில் சிறுமியை அவமதித்தது குா்ஆனின் கட்டளையை மட்டுமல்ல, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளையும் மீறும் செயல் என்றாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com