
மம்தா பானா்ஜி
கொல்கத்தா: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்துக்கான நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி, பிரதமா் மோடிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை கடிதம் அனுப்பினாா்.
அந்தக் கடிதத்தில் மம்தா பானா்ஜி கூறியிருப்பது:
நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த 4 மாதகாலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை. இத்திட்டத்துக்கும், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்துக்கும் (பிஎம் அவாஸ் யோஜனா) மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு நிதி விடுவிக்காதது வியப்பளிக்கிறது.
இந்த இரு திட்டங்களுக்கும் மாநில அரசு ரூ.6,500 கோடி விடுவிக்க வேண்டியுள்ளது. பிரதமரின் வீடுகட்டும் திட்ட நடைமுறையில் மேற்கு வங்க அரசு முன்னிலை வகிக்கிறது. இத்திட்டத்தின்கீழ் கடந்த 2016-17-இலிருந்து 32 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும், சாமானிய மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை உணா்ந்தும் பிரதமா் இதில் தலையிட்டு நிதியை தாமதமின்றி உடனடியாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அறிவுறுத்த வேண்டும் என அதில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...