அமைச்சர் பொன்முடிக்கு பாடம் எடுத்த சஞ்சய் ரெளத்...பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கிய சிவசேனை

அனைத்து மாநிலங்களிலும் ஒரே மொழி இருக்க வேண்டும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சவாலாக எடுத்து கொள்ள வேண்டும் என சிவசேனை கட்சியின் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ரெளத்
சஞ்சய் ரெளத்

'ஒரே நாடு, ஒரே மொழி' என்ற கொள்கைக்கு ஆதரவாக பேசியுள்ள சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத், அனைத்து மாநிலங்களிலும் ஒரே மொழி இருக்க வேண்டும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சவாலாக எடுத்து கொள்ள வேண்டும் என்றார். இந்தியா முழுவதும் இந்தி பேசப்படுவதாகவும் ஏற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை மாற்று மொழியாக ஏற்று கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதற்கு தென் மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மக்கள் மீது இந்தியை திணிப்பதை ஏற்று கொள்ள முடியாது என்றும் பிராந்திய மொழிகளை பலவீனப்படுத்தும் முயற்சி இது என்றும் அவர்கள் சாடினர்.

இதற்கு மத்தியில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற கூற்றை விமரிசித்து பேசினார். "கோயம்புத்தூரில் பானி பூரி விற்பது யார்?" என இந்தி பேசும் வியாபாரிகளை மறைமுகமாக கிண்டலடித்தார். 

இதுகுறித்து சிவசேனை கட்சியின் சஞ்சய் ரெளத்திடம் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், "நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியில் பேசுவேன். ஏனென்றால் நான் சொல்வதை நாடு கேட்க வேண்டும், அது நாட்டின் மொழி. நாடு முழுவதும் பேசப்படும் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே மொழி இந்தி. இந்தி திரையுலகம் நாட்டிலும் உலகிலும் செல்வாக்கு செலுத்துகிறது. எந்த மொழியையும் அவமதிக்கக்கூடாது" என்றார்.

மேலும் விரிவாக பேசிய அவர், "அனைத்து மாநிலங்களிலும் ஒரே மொழி என்ற இந்த சவாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்க வேண்டும். ஒரே நாடு. ஒரே அரசியலமைப்பு, ஒரே சின்னம். ஒரே மொழி மட்டுமே இருக்க வேண்டும்" என்றார்.

மகாராஷ்டிரத்தில் உள்ள பணிகளை வட மாநிலத்துவர்களும் தென் மாநிலத்தவர்களும் பறி கொள்வதாகக் கூறி, 1960களில், சிவசேனை தொடர் பரப்புரை மேற்கொண்டது. இதற்கு நேர்மாறாக, சஞ்சய் ரெளத் தற்போது பேசியுள்ளார்.

மும்பையில் இந்தாண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வட மாநிலத்தவர் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com