வாராணசி மசூதியில் பலத்த பாதுகாப்பு...தொடங்கப்பட்ட விடியோ ஆய்வு பணி

புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவர்களில் வைக்கப்பட்டு சிலைகளை தினமும் வழிபடக் கோரி தொடரப்பட்ட வழக்கை உள்ளூர்  நீதிமன்றம் விசாரித்துவருகிறது.
ஞானவாபி மசூதி வளாகம்
ஞானவாபி மசூதி வளாகம்

உத்தரப் பிரதேசம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் விடியோ மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வு பணி இன்று தொடங்கியது. உள்ளூர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆய்வு குழுவுக்கு தற்போதைக்கு ஒத்துழைப்பு அளிக்கப் போவதாக மசூதி நிர்வாக குழு குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து வாராணசி மாவட்ட மாஜிஸ்திரேட் கெளசல் ராஜ் சர்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டவர்களான வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஆணையர்கள், விடியோ எடுப்பவர்கள் ஆகியோர் மசூதிக்கு சென்று ஆய்வை தொடங்கியுள்ளனர்" என்றார்.

புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அருகே இந்த ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதன் வெளிப்புற சுவர்களில் வைக்கப்பட்டு சிலைகளை தினமும் வழிபடக் கோரி தொடரப்பட்ட வழக்கைதான் உள்ளூர்  நீதிமன்றம் விசாரித்துவருகிறது.

வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இதுதொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் வழக்கின் அனைத்து தரப்பினரும்  கலந்து கொண்டதாகவும் அதில் ஆய்வு குழுவுக்கு ஒத்துழைப்பு அளித்து சட்ட ஒழுங்கை நிலைநாட்ட உதவும்படி கேட்டு கொள்ளப்பட்டதாகவும் கெளசல் ராஜ் சர்மா  கூறியிருந்தார்.

மசூதி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் அஜய் குமார் மிஸ்ராவை மாற்றக் கோரி மசூதி கமிட்டி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், வியாழக்கிழமையன்று மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி ரவிகுமார் திவாகர், இந்த மனுவை நிராகரித்துவிட்டார்.

ஆய்வை மேற்கொள்ளும் ஆணையருக்கு உதவும் வகையில் கூடுதலாக இரண்டு வழக்கறிஞர்களை நியமித்து உத்தரவிட்டார். மேலும், ஆய்வை செவ்வாய்கிழமைக்குள் முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மசூதி வளாகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு பணியில் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளக் கூடாது எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய தரப்பு வழக்கு தொடர்ந்தது. ஆனால், இதில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுவை விசாரிக்க ஒப்பு கொண்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com