
திரிபுரா மாநில முதல்வராக மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக மாநிலத் தலைவருமான மாணிக் சாஹா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்; அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
திரிபுராவின் முதல்வராக இருந்த விப்லவ் தேவ் சனிக்கிழமை திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதையடுத்து, நடைபெற்ற பாஜக பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மாணிக் சாஹா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், மாணிக் சாஹாவுக்கு தலைநகர் அகர்தலாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் எஸ்.என்.ஆர்யா ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரவை பாஜக உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர் பிரதிமா பெüமிக்கும் பங்கேற்றார்.
மாணிக் சாஹா முதல்வர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்த துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா, அமைச்சர் ராம் பிரசாத் பால் ஆகியோர் நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்டனர்.
பதவியேற்றதும் முதல்வர் மாணிக் சாஹா கூறியதாவது:
திரிபுரா மக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன். பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதோடு சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பேன். மாநிலத்தில் முதல்வர் மாற்றத்தின் பின்னணியில் எந்தக் காரணமும் இல்லை என்றார்.
நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் மாநிலத்தில் பாசிஸ வன்முறைப் போக்கில் பாஜக ஆட்சி செய்வதாகக் குற்றம்சாட்டி நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், மாநில மக்கள் அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதை பாஜ உணர்ந்துள்ளதன் அடையாளமே முதல்வர் மாற்றம் என்றனர்.
முன்னதாக, புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்கான பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றபோது, சிலர் மாணிக் சாஹா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்தனர்.
துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா, அமைச்சர் ராம் பிரசாத் பால் ஆகியோர் கூட்டத்தில் நாற்காலிகளைச் சேதப்படுத்தினர். அதன் பின்னர் மாணிக் சாஹா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமர் மோடி வாழ்த்து: திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சாஹா பதவியேற்றதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மாநில முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சாஹாவுக்கு வாழ்த்துகள். 2018 முதல் நடைபெறும் மாநில பாஜக ஆட்சியின் வளர்ச்சிப் பயணத்துக்கு மாணிக் சாஹா கூடுதல் ஊக்கத்தைத் தருவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதல்வர் வாழ்க்கை பின்னணி: மாணிக் சாஹா, உத்தர பிரதேச மாநிலம், லக்னெüவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அவர், 2016} இல் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதன் பின்பு 2020}இல் பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இவர் முன்னாள் பேட்மின்டன் வீரர்; திரிபுரா கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் உள்ளார். அரசியலில் அவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக 2021 நவம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 13 நகராட்சித் தேர்தல்களிலும் பாஜக வெற்றி
பெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...