மலைப்பாம்பு முட்டைகளால் நின்றுபோன நெடுஞ்சாலைப் பணி: அடடா!

மலைப்பாம்பின் 24 முட்டைகளும் குஞ்சுபொரிப்பதற்காக ஒன்றல்ல..இரண்டல்ல 54 நாள்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைப் பாம்பு முட்டைகளால் நின்றுபோன நெடுஞ்சாலைப் பணி: அடடா!
மலைப் பாம்பு முட்டைகளால் நின்றுபோன நெடுஞ்சாலைப் பணி: அடடா!

காசர்கோடு: காசர்கோடு பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலையை நான்கு வழிப் பாதையாக விரிவாக்கும் பணிகள், மலைப்பாம்பின் 24 முட்டைகளும் குஞ்சுபொரிப்பதற்காக ஒன்றல்ல.. இரண்டல்ல 54 நாள்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில வனத்துறை, நெடுஞ்சாலை ஒப்பந்ததார நிறுவனம், பாம்பு மீட்பர்கள் இணைந்து, மலைப் பாம்பின் 24 முட்டைகளும் நல்ல முறையில் குஞ்சு பொரித்து அனைத்து மலைப்பாம்பு குட்டிகளும் இந்த உலகைக் காண வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

24 முட்டைகளும் பொரிக்கப்பட்டு, 15 குட்டிகள் நேற்று வனப்பகுதிக்குள் விடப்பட்டன. மற்றவை இன்று இரவு விடப்படும் என்கிறார் பாம்பு மீட்பர் அமீன்.

மார்ச் 20ஆம் தேதி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக பூமியை செப்பனிட்டபோது ஒரு பொந்து காணப்பட்டது. அதற்குள் மலைப்பாம்பு சுருண்டு கிடந்ததைக் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் பாம்பு முட்டைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக வனத்துறையினர் அமீனை வரவழைத்தனர். அவர் நிலைமைப் பார்த்து, அங்கு நெடுஞ்சாலைப் பணிகளை நிறுத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டு அனுமதி கிடைக்கப்பெற்றது.

நாட்டின் புலிகளுக்கு இணையான வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மலைப்பாம்புகளும் வருவதால் இந்த நடவடிக்கை எளிதாக அமைந்தது.

அமீன் அந்த பொந்தை சோதனை செய்ததில், அதில் ஏராளமான முட்டைகளும், அதனை சுற்றிவளைத்தபடி மலைம்பாம்பு  இருந்ததும் தெரிய வந்தது. இது பற்றி வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர் மாவீஷை தொடர்பு கொண்டு அமீன் பேசினார்.

அவர் அளித்த அறிவுரைப்படி, பாம்பு முட்டைகளை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் குஞ்சுபொரிக்க வைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. முட்டைகளுக்கு 27 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையே தேவை. இது மாறினால் குஞ்சுகள் பொரிக்காது. அதனால்தான் பாம்பு அதனை சுற்றி வைத்துக் கொண்டு வெப்பநிலையை தக்க வைக்கிறது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கேயே பாம்பும் முட்டைகளும் விடப்பட்டு இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அமீன் அந்த பொந்தை பரிசோதித்து வந்தார்.

பொதுவாக ஒரு மலைப்பாம்பு முட்டை 60 - 65 நாள்களில் பொரியும். பாம்பு பொந்து கண்டறியப்பட்ட 54வது நாளில் முட்டைகள் பொரியத் தொடங்கின. முட்டையின் ஓடுகளில் விரிசல்கள் விட ஆரம்பித்தன. இதன் மூலம் பாம்பு முட்டையிட்டு ஒரு வார காலத்துக்குப் பின் அதனை நாங்கள் கண்டறிந்தது தெரிய வந்தது. 

உடனடியாக அந்த 3 அடி ஆழமுள்ள பொந்துக்குள் அமீன் தவழ்ந்து சென்று முட்டைகளை மீட்டு வந்தார். அப்போது, மற்றொரு பொந்தில் அந்த தாய் மலைப்பாம்பு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தும் கூட அது என்னைத்தாக்கவில்லை. அத்தனை முட்டைகளையும் அமீன் தனது வீட்டுக்கு எடுத்து வந்து அதனை பத்திரப்படுத்தி, அனைத்து முட்டைகளும் பொரிந்துவிட்டதாகவும், இது மிகவும் அரிதான நிகழ்வு என்றும் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com