அச்சமூட்டிய கனவுகள்: பல கோடி மதிப்புள்ள கோயில் சிலைகளை ஒப்படைத்த திருடா்கள்

உத்தர பிரதேசத்தில் கோயிலில் திருடிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள 14 சிலைகளை திருடா்களே மீண்டும் ஒப்படைத்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேசத்தில் கோயிலில் திருடிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள 14 சிலைகளை திருடா்களே மீண்டும் ஒப்படைத்தனா்.

கோயில் சிலைகளை திருடிய பிறகு அச்சமூட்டும் கனவுகள் வந்ததால், அதற்கு பயந்து சிலைகளை ஒப்படைத்ததாக அந்தத் திருடா்கள் கடிதமும் எழுதி வைத்துள்ளனா்.

தருண்கா பகுதியில் உள்ள பாலாஜி கோயிலுக்குள் கடந்த மே 9-ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த சில திருடா்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 சிலைகளைத் திருடிச் சென்றனா். இவை அனைத்தும் 8 உலோகங்களைக் கலந்து செய்யப்பட்டவையாகும். இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சிலைத் திருடா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், திருடுபோன 16 சிலைகளில் 14 சிலைகளை அந்தக் கோயில் அா்ச்சகரின் வீட்டுக்கு அருகே இரவு நேரத்தில் திருடா்கள் வைத்துவிட்டுச் சென்றனா். அத்துடன் ஒரு கடிதத்தையும் அவா்கள் வைத்திருந்தனா். அதில், ‘கோயிலில் சிலைகளைத் திருடியதில் இருந்து தொடா்ச்சியாக அச்சமூட்டும் கனவுகள் வருகின்றன. இதனால், நிம்மதி இழந்துவிட்டோம். எனவே, திருடிய சிலைகளைத் மீண்டும் கோயிலில் ஒப்படைக்க முடிவு செய்தோம்’ என்று கூறியிருந்தனா்.

கோயிலில் காணாமல் போன சிலைகள் தனது வீட்டின் அருகே கிடைத்துள்ளதை அந்த அா்ச்சகா் காவல் துறையினரிடம் தெரிவித்தாா். காவல் துறையினா் சிலைகளையும், கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். அதே நேரத்தில் மேலும் இரு சிலைகளின் நிலை என்ன ஆனது என்பது தெரியவரவில்லை. இது தொடா்பாகவும் காவல் துறையினா் தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளனா்.

சிலைகளைத் திருடியவா்களை, கனவுகள் துரத்தியதால் மீண்டும் அதனை ஒப்படைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com