வாழும் மனிதம்: தில்லி தீ விபத்தின் போது அங்கு வந்தது எப்படி? கிரேன் ஓட்டுநர் பதில்

தில்லி முன்ட்காவில் நேரிட்ட தீ விபத்தின் போது, ஒரு நொடி கூட தாமதிக்காமல், தனது கிரேன் மூலம் 50க்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறார் தயானந்த் திவாரி.
வாழும் மனிதம்: தில்லி தீ விபத்தில் 50 பேரைக் காப்பாற்றிய கிரேன் ஓட்டுநர்
வாழும் மனிதம்: தில்லி தீ விபத்தில் 50 பேரைக் காப்பாற்றிய கிரேன் ஓட்டுநர்


புது தில்லி: தில்லி முன்ட்காவில் நேரிட்ட தீ விபத்தின் போது, ஒரு நொடி கூட தாமதிக்காமல், தனது கிரேன் மூலம் 50க்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறார் தயானந்த் திவாரி.

மற்ற வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை இந்த தயானந்த் திவாரி. மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். 

இந்த தீ விபத்து நேரிட்ட அந்த நேரத்தில், அவ்வழியாக தனது சகோதரனுடக் கிரேனில் சென்று கொண்டிருந்தார் தயானந்த் திவாரி. 45 வயதாகும் அவர், கட்டடத்தில் தீப்பிடித்ததைப் பார்த்ததும், தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திராமல், தானே மீட்புப் பணியில் ஈடுபடுவது என்று முடிவெடுத்தார். அந்த ஒரு நல்லெண்ணத்தால் மீட்கப்பட்டவர்கள் 50 பேர்.

ஆம், கிரேன் உதவியோடு கட்டடத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை ஒருவர் பின் ஒருவராக அவர் மீட்டார். இப்படியே தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் 50 பேர் உயிருடன், அந்த தீப்பற்றிய கட்டடத்திலிருந்து வெளியேறினர்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒரு மனிதனாக ஆபத்திலிருக்கும் பிறருக்கு உதவ வேண்டியது என் கடமை என்கிறார். சம்பவம் பற்றி அவர் விவரிக்கையில், தீப்பற்றிய கட்டடத்துக்குள் போக்குவரத்து நெரிசலால் என்னால் அணுக முடியவில்லை. உடனடியாக சாலைத் தடுப்புகளை தகர்தெறிந்தேன். கட்டடத்தின் கண்ணாடி ஜன்னல்களை கிரேன் உதவியோடு உடைத்து உள்ளே இருப்பவர்களை பத்திரமாக மீட்க முயற்சித்தேன்.  அதன் வழியாக 4 முதல் 6 பேர் வரை கிரேனில் ஏற்றி கீழே இறக்கிறேன். இப்படியே 50 பேர் வரை காப்பாற்றினேன். பிறகு கட்டடத்தின் வெப்பத்தை தாங்க முடியாமல், அங்கு மேலும் நிற்பதை தவிர்த்துவிட்டோம்.

இதில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு மனிதனாக செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தேன். கடவுள்தான் எல்லாவற்றையும் செய்கிறார். அவர் என்னை அன்றைய நாள் அங்கு அனுப்பினார். அதன் மூலம் சிலரை காப்பாற்ற முடிந்தது என்கிறார்.

ஆனால் இவரால் காப்பாற்றப்பட்டவர்களோ, தயானந்த் இல்லையென்றால் நாங்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் கண்ணீரோடு.

இந்த தீ விபத்து குறித்து காவல்துறை கூறியிருந்ததாவது, முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 3 அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆனால் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் கட்டடத்திற்குள் இருந்தவா்கள் சிக்கிக் கொண்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் அலுவலகங்களும், ரெளட்டா் (கணனி வன்பொருள்) தயாரிக்கும் அலுவலகங்களும் இருந்ததாக காவல் துணை ஆணையா் சமீா் சா்மா தெரிவித்தாா்.

தீயணைப்பு படையினா் கடுமையாக போராடி இரவு 10.30 மணிக்கு தீயை அணைத்ததாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com