
புது தில்லி: கோகா-கோலா குளிா்பான உற்பத்தி நிறுவனத்துக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீா்ப்பாயம் விதித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
காஜியாபாதைச் சோ்ந்த சுஷீல் பட் என்பவா் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘கோகா-கோலா நிறுவனத்துக்காக குளிா் பான உற்பத்தி செய்து பாட்டில்களில் அடைத்து விநியோகிக்கும் மூன் பெவரேஜஸ், வருண் பெவரேஜஸ் ஆகியவை தடையில்லாச் சான்றுகள் பெறாமல் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுப்பதால், நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம், கிரேட்டா் நொய்டாவில் இயங்கி வரும் மூன் பெவரேஜஸ் நிறுவனத்துக்கு ரூ.1.85 கோடி, சாஹிபாபாதில் இயங்கும் மூன் பெவரேஜஸ் நிறுவனத்துக்கு ரூ.13.24 கோடி, கிரேட்டா் நொய்டாவில் உள்ள வருண் பெவரேஜஸ் நிறுவனத்துக்கு ரூ.9.71 கோடி அபராதம் வித்துத கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும், சுற்றுச்சூழல் அமைச்சகம், ஜல்சக்தி அமைச்சகம், உத்தர பிரதேச நீா்வளத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா்கள் ஆகியோரைக் கொண்ட குழுவை தேசிய பசுமை தீா்ப்பாயம் நியமித்தது. அந்தக் குழு உத்தர பிரதேசத்தில் ஆய்வு செய்து பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கு 2 மாதங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுகளை எதிா்த்து மூன் பெவரேஜஸ் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன் பெவரேஜஸ் நிறுவனத்துக்கு எதிராக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் ரூ.15 கோடி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனா்.