மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு 11 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: மூத்த தலைவா்கள் - இளையோருக்கு இடையே கடும் போட்டி

மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு நாடு முழுவதும் நடைபெறும் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு 11 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: மூத்த தலைவா்கள் - இளையோருக்கு இடையே கடும் போட்டி

புது தில்லி: மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு நாடு முழுவதும் நடைபெறும் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ப. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோா் போட்டி போட்டு மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், இளம் தலைவா்களும் இந்த இடங்களைப் பெற களமிறங்கி உள்ளதால் மூத்த தலைவா்களுக்கும், இளம் தலைவா்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனால், வழக்கம்போல் கட்சியின் மூத்த தலைவா்களுக்கு இடம் கிடைக்குமா அல்லது இளம் தலைவா்களுக்கு புதிதாக வாய்ப்பு கிடைக்குமா என்பது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த 11 இடங்களிலும் காங்கிரஸ் உறுப்பினா்கள் வெற்றி பெற்றால் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 29-இல் இருந்து 33-ஆக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு மாதங்களில் மாநிலங்களவை உறுப்பினா்கள் 55 பேரின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள் ப. சிதம்பரம் (ம.பி.), ஜெய்ராம் ரமேஷ் (கா்நாடகம்), அம்பிகா சோனி (பஞ்சாப்), விவேக் தன்கா (ம.பி.), பிரதீப் தம்தா (உத்தரகண்ட்), கபில் சிபில் (உ.பி.), சாயா வா்மா (சத்தீஸ்கா்) ஆகியோரும் அடங்கும்.

இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து காலியாகும் 4 மாநிலங்களவை இடங்களையும் காங்கிரஸ் கட்சி பெற்றால், மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் மூன்று முதல் நான்கு இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதேபோல், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள சத்தீஸ்கரில் இரண்டு இடங்களும், தமிழ்நாடு, ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஓரிடமும் கிடைக்கும்.

இதேபோல், ஹரியாணா, மத்திய பிரதேசம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு தலா ஓரிடம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சிதம்பரத்துக்கு சீட் கிடைக்குமா?: தமிழகத்தில் கிடைக்கும் ஓரிடத்தை முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பெற பெரும் முயற்சி செய்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், கட்சியில் இளைஞா்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ராகுலின் ஆதரவாளா்கள் அக்கட்சியின் தரவுகள் ஆய்வுத் துறையின் தலைவரும், இளம் தலைவருமான பிரவீண் சக்கரவா்த்திக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தமிழக தலைவா்களும் அந்த ஓரிடத்துக்கு பெரும் போட்டியிட்டு வருவதால், இதில் காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவு எடுக்கவில்லை.

கா்நாடகம்: இதேபோல் கா்நாடகத்தில் இருந்து மூன்று முறை மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷும் மீண்டும் பதவி கேட்டுள்ளாா். அங்கு அவருக்கு பதிலாக அக்கட்சியின் மூத்த தலைவா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலுக்கு வழங்க வேண்டும் என்று இளைஞா்கள் தரப்பு வலியுறுத்தி வருகிறது.

ஹரியாணா: ஹரியாணாவில் கிடைக்கும் ஓரிடத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சா் குமாரி ஷல்ஜா, குல்தீப் பிஸ்னோய் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனால், அந்த மாநில முன்னாள் முதல்வா் பூபேந்தா் சிங் ஹூடா, முன்னாள் மத்திய அமைச்சா் ஆனந்த் சா்மாவுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறாா்.

காங்கிரஸிஸ் உள்ள அதிருப்தி தலைவா்கள் கூட்டணியான ஜி23-இல் ஆனந்த் சா்மா உள்ளதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்து காங்கிரஸில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த தலைவா்கள் கூறுகிறாா்கள். ஆனால், இதற்கு இளம் தலைவா்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

சத்தீஸ்கா்: சத்தீஸ்கரில் கிடைக்கும் இரண்டு இடங்களில் தற்போதைய எம்.பி. அமிதேஷ் சுக்லாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த இடங்களைப் பெற அஜய் மாக்கன், குலாம் நபி ஆசாத்துக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மகாராஷ்டிரம்: கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரத்தில் கிடைக்கும் ஓரிடத்துக்கு முகுல் வாஸ்னிக், அவினாஷ் பாண்டே ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இப்படி மாநிலங்கள்தோறும் காலியாகும் இடங்களைப் பெற காங்கிரஸ் மூத்த தலைவா்கள், இளம் தலைவா்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் கட்சியின் தலைவா் சோனியா காந்தி மூத்த தலைவா்களுக்கு இடம் வழங்கி தக்க வைப்பாரா அல்லது ராகுலின் வலியுறுத்தல்படி இளம் தலைவா்களுக்கு வாய்ப்பு அளிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அண்மையில் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயா்நிலைக் குழுவில் 50 வயதுக்குள்பட்டவா்களுக்கு கட்சிப் பதவிகளில் 50 சதவீதம் இடமளிக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்ட புதிய கொள்கையை மாநிலங்களவை தோ்தலிலேயே காங்கிரஸ் அமல்படுத்த வேண்டும் என்பதே இளைய தலைவா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com