மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை: மோடி பேச்சு

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள். மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 
மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை: மோடி பேச்சு

 
புதுதில்லி: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள். மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டத்தையும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடங்கி வைத்து பயன்களை வழங்கினார். 

கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டம் தான் பி.எம். கேர்ஸ். இந்த திட்டத்தின் கீழ் பயன்களை வழங்கும் நிகழச்சி, திங்கள்கிழமை காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார். 

பின்னர், மோடி பேசுகையில், கரோனாவால் தங்கள் அன்புக்குரிய பெற்றோர்களை இழந்த இந்த குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு அனுதாபம் தெரிவித்த மோடி, இன்று நம்முடன் இருக்கும் குழந்தைகள் “ஒவ்வொரு நாளும் சந்திக்கும் போராட்டம், இன்னல்கள், சந்திக்கும் சவால்கள் என அவர்களின் வலியை வார்த்தைகளால் சொல்வது கடினம் என்று நா தழுதழுத்த நிலையில் பேசிய பிரதமர், குழந்தைகளிடம் யாருக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதை என்பதை ஒரு பிரதமராக அல்ல, குடும்ப உறுப்பினராக பேசுகிறேன் என்று கூறினார்.

இதுபோன்ற சூழ்நிலையில், “குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டமானது, கரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்து தவிக்கும் குழந்தைகளின் சிரமங்களைக் குறைக்கும் ஒரு சிறிய முயற்சியாகும். குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் என்பது ஒவ்வொரு நாட்டினரும் உங்களுடன் மிகுந்த உணர்வுடன் இருக்கிறார்கள் என்பதன் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது. யாருக்காவது தொழில்முறை படிப்புகள் அல்லது உயர்கல்விக்கு கல்விக் கடன் தேவைப்பட்டால், பி.எம். கேர்ஸ் அதற்கும் உதவும். இதர அன்றாட தேவைகளுக்காக, பிற திட்டங்களின் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 23 வயதை அடையும் போது ரூ.10 லட்சத்தைத் தவிர, ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும். அதன் மூலம் உடல்நலக் காப்பீடும், உளவியல் மற்றும் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்யவும்,  உதவிபுரிவதற்காக சம்வாத் ஹெல்ப்லைன் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும், பெற்றோரின் அன்புக்கு எதுவும் ஈடுசெய்ய முடியாது என்று கூறிய மோடி, தொற்றுநோயின் வேதனையான தாக்கத்தை மிகவும் தைரியமாக எதிர்கொண்டதற்காக குழந்தைகளுக்கு வணக்கம் தெரிவித்தார்.  "இந்த இக்கட்டான நேரத்தில் குழந்தைகளாகிய உங்கள் அனைவருடனும் மா பாரதி இருக்கிறார்". குழந்தைகளுக்கான பொறுப்பை நிறைவேற்ற பி.எம். கேர்ஸ் திட்டத்தின் மூலம் முயற்சிக்கப்படுவதாகவும்,  பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள். மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை.  கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவது சிறு ஆறுதலை அளித்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். 

நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் 9042 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளநிலையில், அதில் 4345 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த குழந்தைகளுக்‍கு கல்வி உதவித்தொகையை பிரதமர் இன்று வழங்கினார். 
  
குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. 

மார்ச் 11, 2020 முதல் பிப்ரவரி 28, 2022 வரை கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் இருவரையோ, அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரையோ, அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ, அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம் 2021 மே 29 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி மற்றும்  உதவித்தொகை மூலம் அவர்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களுக்கு தன்னிறைவு அளிப்பதற்காக 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 

பாதிக்கப்பட்ட குழந்தைகளை இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்காக http://pmcaresforchildren.in/ என்ற தளம் தொடங்கப்பட்டது.  ஒப்புதல் நடைமுறைகளுடன் குழந்தைகளுக்கான அனைத்து உதவிகளை வழங்கும் ஒற்றை சாளர அமைப்புமுறையாக இந்தத் தளம் செயல்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com