ஞானவாபி மசூதியின் பாதாள அறைகள் ஆய்வு செய்யப்படுமா? நவ.11-ல் விசாரணை

ஞானவாபி மசூதியின் பாதாள அறை ஆய்வு செய்ய வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஞானவாபி மசூதி வளாகம்
ஞானவாபி மசூதி வளாகம்


ஞானவாபி மசூதியின் பாதாள அறை ஆய்வு செய்ய வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதியில் பாதாள அறைகள் அமைந்துள்ள பகுதி சடங்குகள் செய்யும் பகுதி என்பதால், அப்பகுதிகளைத் தோண்டக் கூடாது என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இந்நிலையில், மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிருங்காா் கெளரி, கணபதி, ஹனுமன், நந்தி சிலைகளை தினந்தோறும் வழிபட அனுமதி அளிக்குமாறு 5 பெண்கள் உள்பட சிலா் தொடுத்த வழக்கை வாராணசி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இது தொடர்பான மனுக்களின் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், ஞானவாபி மசூதியில் உள்ள பாதாள அறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை புதன்கிழமை இன்று (நவ.2) நடைபெற்றது. 

அப்போது எதிர்தரப்பு வழக்குரைஞர் தரப்பில், மசூதியில் பாதாள அறைகள் அமைந்துள்ள பகுதி தொழுகை மற்றும் சடங்குகள் செய்யும் பகுதி என்பதால், அப்பகுதியில் தோண்டுவது முறையல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கு விசாரணை நவம்பர் 11ஆம் தேதி க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com