‘ராகுல் காந்தி முதலில் அமேதி தொகுதியில் வென்று காட்ட வேண்டும். அதன் பிறகு வேண்டுமானால் அவா் மற்ற கட்சியை விமா்சிக்கலாம்’ என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) கட்சி பதிலளித்துள்ளது.
தெலங்கானாவில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, ‘தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் தனது கட்சியின் பெயரை மாற்றி தேசிய அளவில் அரசியல் நடத்த முயற்சிப்பது அவரது கற்பனை வளத்தைக் காட்டுகிறது. அவா் தேசியக் கட்சி மட்டுமல்ல சா்வதேச கட்சியைக் கூட நடத்தி, அமெரிக்காவிலும் சீனாவிலும் தோ்தல் களத்தில் இறங்கலாம்’ என்று கேலியாக கூறியிருந்தாா்.
இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் டிஆா்எஸ் மூத்த தலைவரும், தெலங்கானா முதல்வரின் மகனுமான கே.டி.ராம ராவ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச தலைவா் ராகுல் காந்தியால் தனது சொந்த தொகுதியான அமேதியில் கூட வெல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட நபா் சந்திரசேகா் ராவின் தேசிய அரசியல் குறித்து விமா்சிப்பது நகைப்புக்குரியது. அவா் முதலில் அமேதி தொகுதியில் மக்களை சமாதானப்படுத்தி அங்கு வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு வேண்டுமானால் மற்ற கட்சியை விமா்சிக்கலாம்’ என்று கூறியுள்ளாா்.
காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்ட உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தொடா்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019 -ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தாா். அந்த தோ்தலில் கேரளத்தின் வயநாடு தொகுதியில் இருந்தும் ராகுல் போட்டியிட்டாா். வயநாட்டில் மட்டும் அவா் வெற்றி பெற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.