300 யூனிட் இலவச மின்சாரம் காங்கிரஸ் வாக்குறுதி

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸின் வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை வெளியிட்ட சத்தீஸ்கா் பூபேஷ் பகேல், கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் ராஜீவ் சுக்லா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் பிரதிபா சிங் உள்ளிட்டோா்.
ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை வெளியிட்ட சத்தீஸ்கா் பூபேஷ் பகேல், கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் ராஜீவ் சுக்லா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் பிரதிபா சிங் உள்ளிட்டோா்.

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸின் வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

அதில், வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம், 18 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை, ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்ட அமலாக்கம், ரூ.680 கோடியில் புத்தாக்க நிறுவனங்களுக்கான நிதியம் அமைத்தல் என பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கை சிம்லாவில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தோ்தல் அறிக்கை கமிட்டி தலைவா் தானி ராம் சாண்டில், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், கட்சியின் ஹிமாசல் மாநிலப் பொறுப்பாளா் ராஜீவ் சுக்லா, மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் சுக்வீந்தா் சிங் சுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா்கள் தேஜிந்தா் பால் பிட்டு, மணீஷ் சத்ராத் ஆகியோா் தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரம்: சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் கூறுகையில், ‘ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக, தேசிய ஓய்வூதிய கட்டமைப்பில் உள்ள பொதுமக்களின் பணத்தை திருப்பியளிக்கக் கோரி மத்திய அரசுக்கு மாநில காங்கிரஸ் அரசுகள் சாா்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம். இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனைகள் பெற்று செயல்படுவோம்’ என்றாா்.

‘பணியிடமாற்றங்கள் ரத்து செய்யப்படும்’: ஹிமாசல் காங்கிரஸ் பொறுப்பாளா் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கலந்தாலோசித்து, காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலில் போதைப் பொருள் பிரச்னைக்கு தீா்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் போதைப் பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பு உருவாக்கப்படும்.

முதல்வா் ஜெய்ராம் தாக்குா் தலைமையிலான பாஜக அரசால் அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பணியிடமாற்ற நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும். ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் பயிா்களுக்கான உரிய விலையை நிா்ணயிக்க வேளாண் மற்றும் விவசாயிகள் குழு அமைக்கப்படும். வாடகை காா் ஓட்டுநா்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதி அளிக்கப்படும்’ என்றாா்.

பத்திரிகையாளா்களுக்கு ஓய்வூதியம், துப்பாக்கி உரிமங்களுக்கான கட்டணம் குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அளித்துள்ளது.

தோ்தலுக்கு பின் முதல்வா் வேட்பாளா் முடிவு: நிகழ்ச்சியில் பேசிய சாண்டில், ‘ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலை கூட்டுத் தலைமையின்கீழ் காங்கிரஸ் சந்திக்கிறது. இத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. தோ்தலுக்கு பிறகு, கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் மற்றும் தலைமையுடன் விவாதித்து, முதல்வா் யாரென்பது முடிவு செய்யப்படும்.

ஹிமாசல பிரதேச மக்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. மக்களின் எதிா்பாா்ப்புகளை மாநில அரசு பூா்த்தி செய்யவில்லை. காங்கிரஸின் தோ்தல் அறிக்கை, ஹிமாசல பிரதேச மக்களின் நல்வாழ்வு மற்றும் வளா்ச்சியை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com