பாபர் மசூதி இடிப்பு: அத்வானி, 31 பேர் விடுவிப்புக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு
பாபர் மசூதி இடிப்பு: அத்வானி, 31 பேர் விடுவிப்புக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ கிளை புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
 உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் 1992, டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், பிரிஜ் பூஷண் ஷரண் சிங், சாத்வி ரிதம்பரா உள்பட 32 பேர் மீது கிரிமினல் வழக்கு தனியாக நடைபெற்று வந்தது.
 ஆதாரங்கள் இல்லை: நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2020, செப். 30-ஆம் தேதி அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பு அளித்தது.
 அதில், "பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின்போது எடுக்கப்பட்டதாக நம்பப்படும் விடியோ பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவை அசலானவை என்பதை நிரூபிக்கும் வகையில் நீதிமன்றத்தில் உண்மை ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. ஆவணப் படத்தை ஆதாரமாக மட்டும் வைத்து இந்த வழக்கு முழுவதும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
 கரசேவகர்களுடன் பாபர் மசூதியை இடிக்கும் நோக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. பாபர் மசூதியை அவர்கள் திட்டமிட்டு இடிக்கவில்லை; தற்செயலாக நடந்துவிட்டது' என்று தெரிவித்தது.
 மேல் முறையீடு: இந்த உத்தரவை எதிர்த்து அயோத்தியில் வசிக்கும் ஹாஜி மஹமூது அகமது, சையத் அக்லாக் அகமது ஆகியோர் அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
 அதில், "பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணையில் சாட்சிகளாக நாங்கள் இருந்தோம். உத்தர பிரதேச அரசும் சிபிஐயும் இந்த வழக்கில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றும், அதனால் நாங்கள் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் கூறுவது முற்றிலும் ஆட்சேபத்துக்குரியது.
 இவ்வழக்கு தொடர்பாக குற்றவாளிகளுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இருந்தும்கூட விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்காமல் தவறு செய்துவிட்டது. ஆகையால், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என்று அதில் கூறியிருந்தனர்.
 தள்ளுபடி: இந்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததா என்பதை அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது. மேல்முறையீடு செய்த இருவரும் பாபர் மசூதி வழக்கில் புகார்தாரர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ இல்லை என்பதால் இந்த மனுவை ஏற்கக் கூடாது என உத்தர பிரதேச அரசு, சிபிஐ, குற்றம்சாட்டப்பட்ட 31 பேரில் ஒருவரான சம்பத் ராய் ஆகியோர் தரப்பிலும் வாதிடப்பட்டது.
 செப்டம்பர் 5-ஆம் தேதி சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக். 31-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
 இதையடுத்து, அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ கிளையின் நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, சரோஜ் யாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.
 அதில், "மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்த இருவரும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதால் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. மனுதாரர்களுக்கு வழக்குடன் தொடர்பு இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட மனோஜ் குமார் சிங் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com