குஜராத் தேர்தல்: பாஜக 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை பாரதிய ஜனதா கட்சி சனிக்கிழமை வெளியிட்டது. 6 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலில் இரண்டு பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதனால் குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

முன்னதாக, 182 தொகுதிகளில் 160 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. இதில், 14 பெண்கள், 13 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 24 பேர் பட்டியல் பழங்குடியினர் மற்றும் தற்போதைய பேரவை உறுப்பினர்கள் 69 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி, 104 தொகுதிகளுக்கும், ஆம் ஆத்மி 176 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், ஆளும் பாஜக  6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  இதையடுத்து 166 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 

தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 

இதையடுத்து வாய்ப்பு வழங்கப்படாத உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பேரவை உறுப்பினர்கள் ஆகிய 5 பேர் சுயேட்சையாக போட்டியிட போவதாக தெரிவித்துள்ளனர்.

பாஜக கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் வரும் தேர்தலில் ஏழாவது முறையாக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முணைப்பில் ஆளும் பாஜக திட்டமிட்டு களத்தில் இறங்கியுள்ளது.

நட்சத்திரப் பிரசார பட்டியல்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நட்சத்திரப் பிரசார பட்டியலை பாஜக தயாரித்துள்ளது. இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ஸ்மிருதி ரானி, தர்மேந்திர பிரதான், மன்சுக் மாண்டவியா மற்றும் புருஷோத்தம் ரூபாலா ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய நபர்கள்.

மேலும், முதல்வர் பூபேந்திர படேல், பாஜக மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி ஆகியோரும் நட்சத்திரப் பிரசார பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com