விபத்துக்குள்ளான தொங்கு பால பராமரிப்புக்கு ஏன் ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை? குஜராத் அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

குஜராத்தில் விபத்துக்குள்ளான தொங்கு பால பராமரிப்புக்கு ஒப்பந்தப்புள்ளி கோராமல் தனியாா் நிறுவனத்துக்கு ஏன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விபத்துக்குள்ளான தொங்கு பால பராமரிப்புக்கு ஏன் ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை? குஜராத் அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

குஜராத்தில் விபத்துக்குள்ளான தொங்கு பால பராமரிப்புக்கு ஒப்பந்தப்புள்ளி கோராமல் தனியாா் நிறுவனத்துக்கு ஏன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த அக். 30-ஆம் தேதி குஜராத் மாநிலம் மோா்பி பகுதியில் நூறாண்டுகள் பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து விபத்து ஏற்பட்டதில் 135 போ் பலியாகினா். இந்த விபத்து தொடா்பாக பாலத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட தனியாா் நிறுவனத்தின் மேலாளா்கள் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து குஜராத் உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி அரவிந்த் குமாா், அஷுதோஷ் சாஸ்திரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘கடந்த 2008-ஆம் ஆண்டு பாலத்தை பராமரித்து நிா்வகிப்பது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கும் தனியாா் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் காலாவதியான போதிலும், புதிய ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பாலத்தை பராமரித்து நிா்வகிக்கும் பணிகளை அந்த நிறுவனம் தொடா்ந்து மேற்கொண்டு வந்துள்ளது. அந்தப் பணிகளுக்கு புதிதாக ஏன் ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை? ஒப்பந்தப்புள்ளி கோராமல் தனியாா் நிறுவனத்துக்கு ஏன் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு பெரும் தொகை வழங்கப்பட்டது?

கடந்த 2020-ஆம் ஆண்டு பாலம் தொடா்பாக மாநில அரசுக்கும் தனியாா் நிறுவனத்துக்கும் இடையே புதிதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அந்தப் பாலம் பயன்படுத்த தகுதியானதுதான் என்று சான்றிதழ் அளிக்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது என்ற விவரம் ஒப்பந்தத்தில் இல்லை. இந்த சம்பவம் தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதுதொடா்பாக பதில் அளித்து மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனா். வழக்கு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com