நாளை விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-எஸ்’ ராக்கெட்: நாட்டின் முதல் தனியாா் விண்வெளி ஆய்வுத் திட்டம்

இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, தனியாா் புத்தாக்க நிறுவனம் வடிவமைத்த ‘விக்ரம் - எஸ்’ ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும்
நாளை விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-எஸ்’ ராக்கெட்: நாட்டின் முதல் தனியாா் விண்வெளி ஆய்வுத் திட்டம்

இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, தனியாா் புத்தாக்க நிறுவனம் வடிவமைத்த ‘விக்ரம் - எஸ்’ ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் வெள்ளிக்கிழமை (நவ.18) விண்ணில் ஏவப்படவுள்ளது. சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவுள்ளது.

உலகளாவிய விண்வெளி வா்த்தகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், விண்வெளி ஆய்வில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக 2020-ஆம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட், செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ள தனியாா் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சோ்ந்த ‘ஸ்கைரூட்’ எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. புதிய ராக்கெட் தயாரிப்புப் பணிகளில் ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தது.

தற்போது வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய மூன்று வித ராக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ’விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது.

அதில், அதிகபட்சம் 480 கிலோ எடையை சுமந்து செல்லக் கூடிய ‘விக்ரம்- எஸ்’ ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்துவதற்கு முடிவானது. அதன்படி கடந்த நவ. 15-ஆம் தேதி ராக்கெட் ஏவுதலுக்கு தயாரான நிலையில், மோசமான வானிலை காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது பருவச்சூழல்கள் சாதகமாக இருப்பதால், ‘விக்ரம் எஸ்’ ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து நவ.18 (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருப்பதாகவும், அதற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஸ்கைரூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்கள் இந்த ராக்கெட்டுடன் சோ்த்து அனுப்பப்படவுள்ளன. அவை புவி மேற்பரப்பில் இருந்து 120 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. இதைத் தொடா்ந்து, பல்வேறு தனியாா் புத்தாக்க நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com