3 நாள்கள் மருத்துவமனையில் இருந்த ஷ்ரத்தா! துன்புறுத்திய அஃப்தாப்! - நண்பர்கள் வாக்குமூலம்

முதுகுத்தண்டு வலி, தோள்பட்டை வலி காரணமாக ஷ்ரத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், முகத்தில் சில காயங்கள் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயங்கள் ஏற்பட்ட தழும்புகளுடன், ஷ்ரத்தா
காயங்கள் ஏற்பட்ட தழும்புகளுடன், ஷ்ரத்தா

தில்லியில் உடன் வசித்த நபரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா, கடந்த 2020ஆம் ஆண்டு 3 நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். 

ஷ்ரத்தா வால்கருடன் ஒரே வீட்டில் வசித்துவந்த அஃப்தாப் அமீன்,  சின்னச் சின்ன சண்டைகளுக்கே கொடூரமாகத் தாக்கியதால், பலத்த காயமடைந்து ஷ்ரத்தா சிகிச்சை பெற்று வந்ததாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது ஷ்ரத்தா எடுத்துக்கொண்ட காயங்களுடன் கூடிய புகைப்படத்தையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். 

மும்பையைச் சேர்ந்த கால்சென்டர் ஊழியரான ஷ்ரத்தா, அஃப்தாப் பூனாவாலா என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார். அவர்களிடையே அடிக்கடி சண்டைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை அஃப்தாப் கொடூரமான முறையில் கொன்றுள்ளார். 

தனது மகளைக் காணவில்லை என ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர். அஃப்தாபை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

ஆரம்பத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நடந்துகொண்ட அஃப்தாபிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன. 

ஷ்ரத்தாவைக் கொன்று உடலை 35 பாகங்களாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியதாகவும், உடல் பாகங்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.  

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஷ்ரத்தாவின் நண்பர்கள் காவல் துறையின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், அஃப்தாப் தாக்கியதில், பலத்த காயமடைந்த ஷ்ரத்தா, மகாராஷ்டிர மாநிலம் வசாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முதுகுத்தண்டு வலி, தோள்பட்டை வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், முகத்தில் சில காயங்கள் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஷ்ரத்தாவை அனுமதிக்கும்போது அஃப்தாபும் உடன் இருந்ததாக மருத்துவமனை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மருத்துவர் எஸ்.பி. ஷிண்டே, தோள் பட்டை மற்றும் முதுகுவலி காரணமாக ஷ்ரத்தா அனுமதிக்கப்பட்டார். ஆனால், அந்த வலி எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணங்களைக் கூற அவர் மறுத்துவிட்டார். கடுமையான காயங்கள் அவர் உடலில் இருந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கும்போது அஃப்தாபும் உடன் இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். 

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும்போது காயங்கள் ஏற்பட்ட தழும்புகளுடன், ஷ்ரத்தா சிரித்த முகமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com