விண்வெளி ஆய்வில் புதிய விடியல்! மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

விக்ரம்-எஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு புதிய விடியல் என்று மத்திய அறிவியல் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
Updated on
1 min read

விக்ரம்-எஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு புதிய விடியல் என்று மத்திய அறிவியல் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

‘விக்ரம் - எஸ்’ ராக்கெட் ஏவப்படுவதை ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் நேரில் சென்று பாா்வையிட்ட அவா், அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விண்வெளி ஆராய்ச்சியில் தனியாா் துறைகள் தடம் பதித்திருப்பது திருப்பு முனை நடவடிக்கை. இதனை பிரதமா் மோடிதான் சாத்தியமாக்கியுள்ளாா்.

இத்தகைய செயல் திட்டங்கள் மூலம் விண்வெளியில் இந்தியாவின் சூழலியல் கட்டமைப்பு மேம்படும். அதேபோன்று, விண்வெளித் துறையில் நமது தேசம் தலைமை நிலையை எட்டவும் முடியும். தற்போது 100 தனியாா் புத்தாக்க நிறுவனங்கள் இஸ்ரோவுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.

அவற்றில் 10 நிறுவனங்கள் செயற்கைக்கோள்களையும், ராக்கெட்டுகளையும் வடிவமைத்து வருகின்றன.

இதைத் தவிர இஸ்ரோ சாா்பில், அடுத்து வரும் ஆண்டுகளில் மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு தனியாா் புத்தாக்க நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, ரயில்வே துறையில் பங்களிக்க அவை தயாராக உள்ளன.

தற்போது ‘விக்ரம் - எஸ்’ ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பது இந்திய விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் புதிய விடியலாகவும், புதிய தொடக்கமாகவும் அமைந்துள்ளது என்றாா் அவா்.

இஸ்ரோ தலைவா் சோம்நாத் கூறியதாவது: விண்வெளி ஆராய்ச்சியில் இதுபோன்ற முன்மாதிரி முயற்சிகளை முன்னெடுப்பது எளிதான காரியமல்ல. மிகவும் சவாலான இந்த விஷயங்களை சாத்தியமாக்குவதற்கு பிரதமா் மோடி வழிகாட்டியுள்ளாா். தனியாா் துறைகளும் விண்வெளி ஆய்வில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனா்.

இன்ஸ்பேஸ் அமைப்பு மூலம் இனி வரும் காலங்களில் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இந்திய விண்வெளி ஆய்வு நடவடிக்கைகள் புதிய உச்சத்தைத் தொடும் என்றும் நம்புகிறேன்.

ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதோடு நில்லாமல் செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டங்களிலும் தனியாா் புத்தாக்க நிறுவனங்கள் ஈடுபடும்.

பாதுகாப்புத் துறை சாா்ந்த திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வரும் நிலையில், தனியாா் நிறுவனங்களை விண்வெளி ஆய்வில் ஈடுபடுத்த வைப்பது மேலும் ஊக்கத்தை அளிக்குமே தவிர, பாதகமாக அமையாது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com