ராணுவத்தில் 4 மாதங்கள் பணியாற்றிய இளைஞருக்கு தெரிய வந்த அதிர்ச்சிகர உண்மை

அவர் ராணுவப் பணியில் சேர்க்கப்படவேயில்லை என்ற அதிர்ச்சிகர உண்மை தெரிய வந்திருப்பதாக அவர் தரப்பில் அளிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மீரட்: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த நான்கு மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில், அவர் ராணுவப் பணியில் சேர்க்கப்படவேயில்லை என்ற அதிர்ச்சிகர உண்மை தெரிய வந்திருப்பதாக அவர் தரப்பில் அளிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ அடையாள அட்டை, ராணுவ சீருடையுடன், அவர் காவல்நிலையத்தில் அளித்திருக்கும் புகார், ராணுவத்தில் ஆள் சேர்ப்பில் நடந்த அதிர்ச்சியளிக்கும் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறுவது என்னவென்றால், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற இளைஞர் கடந்த ஜூலை மாதம் ராணுவத்திலிருந்து பணி ஆணை வந்ததாகக் கூறப்பட்டதையடுத்து, ராணுவத்தில் நான்கு மாதங்கள் பணியாற்றி மாதம் ரூ.12,500 ஊதியமும் பெற்று வந்தார். 

ஆனால், உண்மையில், காஸியாபாத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் (20) கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார். ஏற்கனவே ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றிய ராகுல் சிங்கின் பொறியில் மனோஜ் குமார் சிக்கியுள்ளார். ராணுவத்தில் மிகப்பெரிய பதவியில் இருப்பதைப் போல ராகுல் சிங் நடந்து கொண்டுள்ளார்.

பணம் கொடுத்தால் ராணுவத்தில் பணி வாங்கித் தருவதாக ராகுல் சிங்கின் உதவியாளர்கள் விரித்த வலையில் விழுந்த மனோஜ் குமார் 16 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பிறகு அவருக்கு ராணுவத்தில் பணி கிடைத்துவிட்டதாக ராகுல் சிங் கூறி, ராணுவ சீருடையும் துப்பாக்கியும் கொடுத்துள்ளனர்.

நான்கு மாதங்கள் ராணுவ முகாமிற்கு வெளியே துப்பாக்கியை வைத்துக் கொண்டு பாதுகாப்பில் ஈடுபடுவதும், ராகுல் சிங் சொல்லும் வேலைகளை செய்வதுமாக இருந்துள்ளார் மனோஜ் குமார்.

மனோஜ் குமார் பணி குறித்து சக ராணுவ வீரர்கள் அவ்வப்போது சந்தேகம் எழுப்பியதால், அது குறித்து விசாரணை நடத்திய போதுதான், ராணுவத்தில் மனோஜ் குமார் பணியமர்த்தப்படவேயில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது குறித்து மனோஜ் குமார் கூறுகையில், ஒரு நாள் என்னை ராணுவ முகாம் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு உயர் அதிகாரி போன்று இருந்த ஒருவர் என்னை பரிசோதித்தார். பிறகு சில நாள்கள் கழித்து எனக்கு வேலை கிடைத்துவிட்டதாகக் கூறினார்கள். கையில் துப்பாக்கிக் கொடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டேன்.

பிறகுதான் முகாமில் இருந்த மற்ற ராணுவ வீரர்கள் எனது அடையாள அட்டை போலியானது என்று கூறினார்கள். தொடர்ந்து விசாரித்ததில், நான் ராணுவத்தில் பணியமர்த்தப்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாகக் கூறுகிறார் அதிர்ச்சி மாறாத கவலையோடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com