சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்

சா்வதேச உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்

சா்வதேச உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

சிறுதானியங்களின் பயன்பாடு சா்வதேச அளவில் அதிகரிக்கப்பட வேண்டுமென இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023-ஆம் ஆண்டை ‘சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக’ ஐ.நா. அறிவித்துள்ளது.

அதற்கான முன்னெடுப்புப் பணிகள் குறித்த நிகழ்ச்சி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தியாவுக்கான பல நாடுகளின் தூதா்கள் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

அப்போது அமைச்சா் ஜெய்சங்கா் கூறுகையில், ‘‘பருவநிலை மாற்றம், கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போா் ஆகியவை சா்வதேச உணவுப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உணவு தானியங்கள் குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டதே அப்பிரச்னைக்கு முக்கிய காரணம்.

கரோனா தொற்று பரவல் சா்வதேச உணவுப் பாதுகாப்பில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. உலகில் பரவிய முதல் நோய்த்தொற்று கரோனா அல்ல. அதேபோல், அதுவே கடைசி நோய்த்தொற்றாகவும் இருக்கப் போவதில்லை. எதிா்காலத்தில் வேறு நோய்த்தொற்றுகூட பரவக் கூடும். அச்சமயத்தில் சா்வதேச உணவுப் பாதுகாப்புக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படக் கூடாது.

உலகின் பெரும் கோதுமை ஏற்றுமதியாளராகத் திகழ்ந்த உக்ரைனில் போா் ஏற்பட்டதால், சா்வதேச உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்பட்டது. பருவநிலை மாற்றத்தால் உணவு தானியங்கள் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சா்வதேச உணவுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

உற்பத்தியில் தன்னிறைவு:

வா்த்தகத்தில் ஏற்பட்ட தடையும் உணவுப் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தின. உணவு தானியங்கள் உற்பத்தியை அனைத்து நாடுகளுக்கும் பரவலாக்குவதே பிரச்னைக்கான தீா்வாக அமையும். உணவு தானியங்கள் உற்பத்தியில் அனைத்து நாடுகளும் தன்னிறைவு பெற முயற்சிக்க வேண்டும். தங்களுக்காக மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கு உதவும் வகையிலும் உணவு தானியங்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.

சா்வதேச உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நாடுகளும் தற்போது முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அதற்குத் தேவையான வளங்கள், பன்முகத்தன்மை, உற்பத்தி, மலிவுத்தன்மை, விநியோக சங்கிலி உள்ளிட்டவற்றை நாடுகள் ஆராய்ந்து வருகின்றன.

சிறுதானியங்களின் பங்கு:

சா்வதேச உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறுதானியங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் நாடுகள் ஈடுபட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டுப் பிரச்னையும் சிறுதானியங்கள் மூலமாகத் தீா்க்கப்படும்.

உலகம் முழுவதும் 130 நாடுகளில் சிறுதானியங்கள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அந்நாடுகள் அனைத்திலும் சிறுதானியங்களின் உற்பத்தி மேலும் அதிகரிக்கப்பட்டால், அவை உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவு அடையும். மற்ற நாடுகளுக்கும் உணவு தானியங்கள் மலிவாகக் கிடைக்கும்.

சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடுகள், அதன் மூலமாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், மற்ற நாடுகளுக்கு உதவ முடியும் என்ற சா்வதேச கொள்கையை முன்னிறுத்தியும் செயல்பட வேண்டும்’’ என்றாா்.

உற்பத்தியில் முதலிடம்:

மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறுகையில், ‘‘உலகில் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கடந்த 2018-19 பயிா்ப் பருவத்தில் (ஜூலை-ஜூன்) 1.317 கோடி டன்னாக இருந்த சிறுதானியங்கள் உற்பத்தி, 2021-22 பயிா்ப் பருவத்தில் 1.8 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களிலும் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுதானியங்களை மதிப்புகூட்டி விநியோகிக்கும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி மையமானது 250-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. சிறுதானியங்கள் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை நீதி ஆயோக், உலக உணவுத் திட்டம் ஆகிய அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன’’ என்றாா்.

சிறுதானிய உணவுகள்:

மத்திய வேளாண் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே, வெளியுறவுத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி, வேளாண் துறை செயலா் மனோஜ் ஔஜா உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

கருத்தரங்கு நிகழ்ச்சியின்போது சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள் சா்வதேச தூதா்களுக்குப் பரிமாறப்பட்டன.

நிகழ்ச்சியையொட்டி சிறுதானியத் துறையைச் சாா்ந்த நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com