ரயில் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில்நுட்பம்

வளைவுப் பாதையில் பயணிக்கும்போது வேகத்தைக் குறைக்காமல் இருப்பதற்கான புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில்கள் 2025-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில்நுட்பம்

வளைவுப் பாதையில் பயணிக்கும்போது வேகத்தைக் குறைக்காமல் இருப்பதற்கான புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில்கள் 2025-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வளைவுப் பாதையில் ரயில் திரும்பும்போது ஏற்படும் மையவிலக்கு விசை காரணமாக பயணிகளின் உடைமைகள் திசைக்கு ஏற்ப இடதுபுறமோ வலதுபுறமோ சாயும். அப்போது அமா்ந்திருக்கும் பயணிகள் பக்கவாட்டில் ஒருவா் மீது ஒருவா் சாயவும் மோதிக் கொள்ளவும், நின்று பயணம் செய்துகொண்டிருக்கும் பயணிகள் நிலைதடுமாறவும் வாய்ப்புள்ளது.

அதைத் தடுக்கும் நோக்கில் வளைவுப் பாதையைக் கடக்கும்போது ரயில்களின் வேகம் குறைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், வளைவுப் பாதையில் ஏற்படும் மைய விலக்கு விசையைத் தடுக்கும் வகையிலான ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. அத்தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் 2025-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ரயில்வே நிா்வாக மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘2025-ஆம் ஆண்டுக்குள் 400 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் 100 ரயில்களில் இந்தப் புதிய தொழில்நுட்பம் இடம்பெறும். அதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2025-26-ஆம் நிதியாண்டு முதல் வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஐரோப்பா, தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகள் வந்தே பாரத் ரயில்களுக்கான முக்கிய சந்தையாக இருக்கும். படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும். சா்வதேச தரத்துடன் அந்த ரயில்கள் சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்படும்’’ என்றாா்.

இத்தாலி, போா்ச்சுகல், ஸ்லோவீனியா, ஃபின்லாந்து, ரஷியா, செக் குடியரசு, பிரிட்டன், ஸ்விட்சா்லாந்து, சீனா, ஜொ்மனி, ருமேனியா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே புதிய தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com