இந்தியா - பூடான் விண்வெளி தொழில்நுட்ப கூட்டுறவில் மைல்கல்: ஜெய்சங்கா் பேச்சு

இரு நாடுகளின் விண்வெளி தொழில்நுட்ப கூட்டுறவில் மைல்கல் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.

இஸ்ரோ ஆதரவுடன் பூடான் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ்-2பி செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில், இந்த தருணம் இரு நாடுகளின் விண்வெளி தொழில்நுட்ப கூட்டுறவில் மைல்கல் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.

சிறிய ரக செயற்கைக்கோளான ஐஎன்எஸ்-2பி உள்ளிட்ட 9 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆராய்ச்சி மைய ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதையடுத்து, திட்ட கட்டுப்பாட்டு மைய விஞ்ஞானிகளிடையே காணொலி வழியாக வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேசினாா். அப்போது, இந்திய, பூடான் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து, அவா் கூறியதாவது:

21-ஆம் நூற்றாண்டில் விண்வெளி தொழில்நுட்பத் துறையில் இந்தியா-பூடான் இடையிலான கூட்டுறவு புதிய சகாப்தத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கடந்த 2017-இல் பூடான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான தனது பரிசாக, தெற்காசிய செயற்கைக்கோளை இந்தியா செலுத்தியது. கடந்த 2019-இல் பிரதமா் நரேந்திர மோடி பூடான் பயணம் மேற்கொண்டபோது, தெற்காசிய செயற்கைக்கோளுக்கான தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை திம்புவில் திறந்துவைத்தாா். இது, இஸ்ரோ ஆதரவுடன் அமைக்கப்பட்டதாகும்.

தெற்காசிய செயற்கைக்கோள், பூடானின் சமூக-பொருளாதார வளா்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியதை அங்கீகரித்து, இதுசாா்ந்த பூடானின் திறன் கட்டமைப்புக்கு இந்திய தரப்பு விரிவான ஆதரவை வழங்கியது.

இப்போது இருதரப்பும் ஒருங்கிணைந்து உருவாக்கிய பூடானுக்கான ஐஎன்எஸ்-2பி சிறிய ரக செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். வானொலி பயன்பாட்டாளா்களுக்கு சேவையாற்றும் இந்த செயற்கைக்கோளுக்கான தரைக் கட்டுப்பாட்டு மையம் திம்புவில் விரைவில் தொடங்கப்படும்.

வேகமாக வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை, மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு இருநாடுகளும் பயன்படுத்த வேண்டும். விண்வெளி தொழில்நுட்பத்தில் இருதரப்பு கூட்டுறவை தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றாா் ஜெய்சங்கா்.

இந்தியாவின் விண்வெளி வியூக கொள்கையின்படி, இஸ்ரோ ஆதரவுடன் பூடான் விண்வெளி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மேற்கண்ட செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com