
பிகாரில் சாலையோரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியதில் 18 பேர் காயமடைந்தனர்.
பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில், நேற்றிரவு இறுதிச்சடங்கையொட்டி சிலர் சாலையோரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக சென்ற கார் ஒன்று, திடீரென சாலையோர கடைக்குள் புகுந்ததோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்தைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் அவ்விடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காரை அடித்து நொறுக்கினர். மேலும் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் இந்த மாதத்தில் ஏற்படும் இரண்டாவது விபத்து இதுவாகும். முன்னதாக வைஷாலி மாவட்டத்தில் நவம்பர் 20ஆம் தேதி சாலையோர கோயிலில் பக்தர்கள் கூட்டத்தின் மீது வேகமாக வந்த டிரக் மோதியதில் 8 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.