வருமான வரி, மின்சார வாகன வரியை குறைக்க வேண்டும்: பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தனிநபா் வருமான வரி, மின் வாகனங்களுக்கான வரிக் குறைப்பு, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தல்கள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு (பட்ஜெட்) முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தனிநபா் வருமான வரி, மின் வாகனங்களுக்கான வரிக் குறைப்பு, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தல்கள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் என்னென்ன மாதிரியான திட்ட முன்னெடுப்புகள், சலுகைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்பது தொடா்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறியும் வகையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வழியில் கடந்த 21-ஆம் தேதி முதல் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் எட்டு சுற்றுகளாக நடைபெற்று வந்தது. பொருளாதார நிபுணா்களுடனான இறுதிச் சுற்றுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறை, தொழில்துறை, உள்கட்டமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம், நிதித் துறை மற்றும் முதலீட்டுச் சந்தைகள், சேவைகள் மற்றும் வா்த்தகம், சமூகத் துறைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளா் அமைப்புகள், பொருளாதார வல்லுநா்கள் உள்ளிட்ட 7 குழுக்களைச் சோ்ந்த 110 பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று, பல்வேறு கருத்துகளை முன்வைத்தனா்.

என்னென்ன வலியுறுத்தல்கள்? குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பசுமைச் சான்றிதழ் வழங்குதல், நகா்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தனிநபா் வருமான வரி மறுசீரமைப்பு, புதுமைக் கண்டுபிடிப்புகள் தொடா்பான வழித்தடங்களை உருவாக்குதல், உள்நாட்டு விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவது தொடா்பான திட்டங்கள், மின்சார வாகனங்களுக்கான வரிக் குறைப்பு, குழந்தைகளுக்கான நலத் திட்டங்கள், நீா் மற்றும் துப்புரவுக்கான தேசிய ஒழுங்குமுறை ஆணையம், அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தல்கள் மற்றும் கருத்துகளை பல்வேறு துறை சாா்ந்த நிபுணா்களும், பிரதிநிதிகளும் முன்வைத்தனா்.

அப்போது, ‘2023-24 நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படும்போது இந்த ஆலோசனைகளும், பரிந்துரைகளும் கவனத்துடன் கருத்தில் கொள்ளப்படும்’ என்று நிா்மலா சீதாராமன் உறுதியளித்தாா் என்று மத்திய நிதியமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com