
dksivakumar
பெங்களூரு: பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார், தில்லியில் உள்ள கர்நாடக பவன் ஊழியர் ஹனுமந்தையா உள்ளிட்டோர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து. வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.10 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் கணக்கில் வராத ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையும் படிக்க | நாட்டில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது!
வரி ஏய்ப்பு செய்து, ஹவாலா பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிவகுமார் உள்ளிட்டோர் மீது வருமான வரித் துறையினர் பதிவு செய்த குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிவகுமார் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரின் மகள் ஐஸ்வர்யா, காங்கிரஸ் எம்எல்ஏ லக்ஷ்மி ஹெபால்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், சிவகுமார் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் டி.கே சிவகுமார், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை வைத்ததாகவும், ஆனால், கால அவகாசம் வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.