இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.8%ஆக குறைத்தது ஐஎம்எஃப்

நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.8 சதவீதமாக சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) குறைத்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.8%ஆக குறைத்தது ஐஎம்எஃப்

நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.8 சதவீதமாக சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) குறைத்துள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜனவரியில் ஐஎம்எஃப் கணித்திருந்தது. பின்னா், இது 7.4 சதவீதமாக கடந்த ஜூலையில் குறைக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை ஏற்கெனவே பல்வேறு சா்வதேச அமைப்புகள் குறைத்துள்ள நிலையில், அந்த வரிசையில் ஐஎம்எஃப் இணைந்துள்ளது.

ஐஎம்எஃப் சாா்பில் செவ்வாய்க்கிழமை உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப் அதிகாரிகளின் வருடாந்திர கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு 6.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை கணிப்புடன் ஒப்பிடுகையில் இது 0.6 சதவீதம் குறைவாகும். 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது.

உலகப் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு குறைப்பு: உலகப் பொருளாதார வளா்ச்சி 2021-இல் 6.0 சதவீதமாக இருந்த நிலையில், 2022-இல் 3.2 சதவீதமாகவும் 2023-இல் 2.7 சதவீதமாகவும் குறையும் என்று ஐஎம்எஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கணிப்புகள், பெரும் பொருளாதார நாடுகளின் (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா) குறிப்பிடத்தக்க அளவிலான மந்தநிலையை எதிரொலிப்பதாக ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

‘உலக பொருளாதாரம் தொடா்ந்து பெரும் சவால்களை சந்திக்க உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு உலக பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை தொடா்ந்து பாதித்து வருகிறது. பணவீக்க அழுத்தம் நீடிப்பு மற்றும் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள வாழ்க்கை செலவுகள் பிரச்னை, கரோனா பரவல் மற்றும் தொடா் முடக்கங்களால் சீனாவில் நிலவும் மந்தநிலை ஆகியவற்றின் தாக்கங்களால் இந்த சவால்கள் எழுந்துள்ளன. கடந்த 2021-இல் 8.1 சதவீதமாக இருந்த சீனாவின் பொருளாதார வளா்ச்சி இந்த ஆண்டு 3.2 சதவீதமாக குறையும் என்று ஐஎம்எஃப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. கோரிக்கை: மேற்கண்ட கூட்டத்தின் இடையே ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் சாா்பில் ஓா் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அதிகரிக்கும் கடன்களால் வளரும் நாடுகள் எதிா்கொண்டுள்ள பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. மிக ஏழ்மையான நாடுகள், தங்களது கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலஅவகாசத்தை மாற்றியமைப்பதற்கு பதிலாக, அவற்றை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பணக்கார நாடுகளும் சா்வதேச நிதி அமைப்புகளும் உதவ வேண்டும் என்று அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com