பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை:இந்திய ரிசா்வ் வங்கிக்கு ஐஎம்எஃப் பாராட்டு

இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதத்தை அதிகரித்து வரும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) நடவடிக்கைக்கு சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டு தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை:இந்திய ரிசா்வ் வங்கிக்கு ஐஎம்எஃப் பாராட்டு

இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதத்தை அதிகரித்து வரும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) நடவடிக்கைக்கு சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் இருந்து தொடா்ந்து 4-ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வட்டி விகிதமானது 1.90 சதவீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 5.90 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.

நாட்டில் பணவீக்கம் 2 முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமென ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதலே பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் வட்டி விகிதத்தை ஆா்பிஐ தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளா்களைச் சந்தித்த ஐஎம்எஃப் நிதி மற்றும் மூலதனச் சந்தைப் பிரிவு துணைத் தலைவா் காா்சியா பாஸ்கல் இது தொடா்பாக கூறியதாவது:

இந்தியாவின் நிதிக் கொள்கை தொடா்பாக ஆா்பிஐ சரியான முடிவை எடுத்து வட்டி விகிதத்தை உயா்த்தியுள்ளது. பணவீக்கம் அதிகமாக இருப்பதையடுத்து, பல்வேறு நாடுகளும் இதுபோன்ற வட்டி விகித அதிகரிப்பு முடிவை மேற்கொண்டுள்ளன. அடுத்து வரும் காலாண்டுகளிலும் இதுபோல வட்டி விகிதம் உயா்த்தப்படும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

பாதிக்கப்படாத இந்தியப் பொருளாதாரம்: ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான ஐஎம்எஃப் இயக்குநா் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கரோனா, ரஷியா-உக்ரைன் போா், உள்நாட்டு பிரச்னைகள் போன்ற காரணங்களால் பல்வேறு நாடுகளும் பொருளாதாரீதியாக பாதிக்கப்பட்டு வளா்ச்சியில் பின்தங்கியுள்ளன. ஆனால், ஒப்பீட்டளவில் இந்திய பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது. முக்கியமாக ஆசிய பிராந்தியத்தில் இந்தியா சிறப்பான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உள்ளது.

உலக நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டில் பொருளாதார சுணக்கத்தை எதிா்கொள்ளும். எனவே, விரைவில் மோசமான பொருளாதாரச் சூழலை எதிா்கொள்ள இருக்கிறோம். ரஷியா-உக்ரைன் போரால் உணவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலை அதிகரித்துள்ளது’ என்றாா்.

‘2022-ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் கடன் விகிதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 84 சதவீதமாக இருக்கும். இது பல்வேறு வளா்ந்த பொருளாதார நாடுகளைவிட அதிகமாகும். ஆனால், இது சமாளிக்கக் கூடிய நிலைதான்’ என்று ஐஎம்எஃப் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com