
முக்கிய ரயில் நிலையங்களில் 3 ஆண்டுகளில் மின்சார வாகன(EV) சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் நடவடிக்கையை ரயில்வே எடுத்து வருகிறது.
இ-மொபைலிட்டியை மேம்படுத்தும் புதிய கொள்கையின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை இந்திய ரயில்வே அமைக்க உள்ளது.
40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெரிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இரண்டாம் கட்டமாக அமைக்க உள்ளது.
டிசம்பர் 2024-க்குள் மும்பை, தில்லி, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா, புனே மற்றும் சூரத் ஆகிய ரயில் நிலையங்களில் மின்சார வாகன(EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே 2025 ஆம் ஆண்டுக்குள் எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை கணிசமாகக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 2500 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக பைஜூஸ் நிறுவனம் அறிவிப்பு!
இந்திய ரயில்வே இணையத்தில் உள்ள மீதமுள்ள மின்மயமாக்கப்பட்ட நிலையங்களில், மண்டல ரயில்வேயின் சாத்தியக்கூறு ஆய்வுகளின் அடிப்படையில், டிசம்பர் 2026-க்குள் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.