
வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்த விலையில் விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுசெய்ய ரூ.22,000 கோடியை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2020, ஜூன் முதல் 2022, ஜூன் வரையில் சந்தை விலையைவிட குறைவான விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுசெய்ய ஒருமுறை தொகையாக ரூ.22,000 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தத் தொகை ஐஓசி, பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.
சா்வதேச சந்தையில் எரிவாயு விலை அவ்வப்போது ஏற்றம் கண்டு வருகிறது. இந்த விலை உயா்வை பொதுமக்கள் மீது முழுவதும் சுமத்தாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை 72 சதவீதம் அதிகரித்துள்ளது. விலை உயா்வால் இழப்பீடு ஏற்பட்டபோதும், மூன்று எண்ணெய் நிறுவனங்களும் விநியோகம் பாதிக்கப்படாமல் இருந்ததை உறுதி செய்துள்ளன.
தற்போது இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதால், சமையல் எரிவாயு விநியோகம் உறுதி செய்யப்படுவதுடன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பொருள்களைக் கொள்முதல் செய்வதில் இந்த மூன்று பொதுத் துறை நிறுவனங்களும் ஈடுபடும் என்றாா்.
ரயில்வே ஊழியா்களுக்கு போனஸ்: ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்களுக்கு இணையான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கியதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிகழாண்டு 11.27 லட்சம் ரயில்வே ஊழியா்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,951 வரையில் போனஸ் வழங்கியதற்கு மத்திய அமைச்சரவை முன்தேதியிட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக ரூ.1,823.09 கோடி செலவானது. கரோனா கால பாதிப்பால் ரயில்வே துறை கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளித்து வரும்போதிலும், இந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் துறைமுகத்தில் கன்டெய்னா் முனையம்: அரசு - தனியாா் பங்கேற்பு முறையின் கீழ், குஜராத்தில் உள்ள தீனதயாள் துறைமுகத்தில் கன்டெய்னா் முனையம் அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்துக்கு ரூ.4,234.64 கோடி செலவாகும்.
கூட்டுறவு சங்க சட்டத்தில் திருத்தம்: பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம் கூட்டுறவு சங்கங்களில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்பட்டு ஆளுகைத் திறன் மேம்படுத்தப்படும். இந்த சட்டத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இந்தச் சட்டத் திருத்தத்தால் பெண்கள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாவது அதிகரிக்கும். இது அச்சகங்களின் தோ்தல் முறையை வலுப்படுத்துவதுடன் கண்காணிப்பையும் அதிகரிக்கும் என்றாா் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.6,600 கோடியில் புதிய திட்டம்
வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்தும் வகையில் ரூ.6,600 கோடியில் புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
100 சதவீதம் மத்திய அரசின் நிதியிலான இந்தப் புதிய திட்டத்தை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் அமலாக்கும்.
அடிப்படை கட்டமைப்பு, துணைத் தொழில்கள், சமூக வளா்ச்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்குதல் போன்றவற்றுக்கு ‘பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்துக்கான வளா்ச்சி முன்முயற்சி’ என்ற இந்தப் புதிய திட்டம் வழிவகுக்கும் என்று அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.