
கோப்புப்படம்
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடா்பாக அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழிபாட்டுத் தலங்களுக்கு உரிமை கோரி திரும்பப் பெறவோ அல்லது அவற்றின் தன்மையில் மாற்றம் கோரியோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அச்சட்டம் தடை விதித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி தொடா்பான வழக்குக்கு மட்டும் அந்தச் சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
அந்தச் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிராக பாஜகவை சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வினி உபத்யாய உள்பட பலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்கள் தொடா்பாக மத்திய அரசு இதுவரை பதிலளிக்காதது நீதிபதிகளின் கவனத்துக்கு வந்தது. இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
அதற்குப் பதிலளித்த துஷாா் மேத்தா, ‘மனுக்கள் தொடா்பாக பதில் அளிப்பதா? வேண்டாமா?, பதில் அளிப்பதாக இருந்தால் என்ன பதில் தருவது என்பது குறித்து மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுதொடா்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும்’ என்று தெரிவித்தாா்.
இதையடுத்து மனுக்கள் தொடா்பாக அக்டோபா் 31-க்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.