கேரள நரபலி: தம்பதி பற்றிய அதிர்ச்சித் தகவலைச் சொல்லும் அண்டைவீட்டார்

பெண்களை நரபலி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட தம்பதி பற்றி ஆச்சரியமும் அதிர்ச்சியும் குறையாமல் பேசுகிறார்கள் அவர்களது அண்டை வீட்டார்.
கேரள நரபலி: தம்பதிகள் பற்றிய அதிர்ச்சித் தகவலைச் சொல்லும் அண்டைவீட்டார்
கேரள நரபலி: தம்பதிகள் பற்றிய அதிர்ச்சித் தகவலைச் சொல்லும் அண்டைவீட்டார்

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செல்வ வளம் பெருக வேண்டும் என்பதற்காக பில்லி சூனியம் செய்து 2 பெண்களை நரபலி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட தம்பதி பற்றி ஆச்சரியமும் அதிர்ச்சியும் குறையாமல் பேசுகிறார்கள் அவர்களது அண்டை வீட்டார்.

பத்தனம்திட்டாவின் எலந்தூரில், தம்பதி வசித்து வந்த வீட்டருகே வாழும் மக்கள், தங்கள் வீட்டுக்கு அருகே நாடே அதிர்ச்சிக்குள்ளான மனித நரபலி நடந்திருப்பதை அறிந்து, முதலில் எல்லோரையும் போல அதிர்ச்சி அடைந்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட பகவல் சிங், மசாஜ் சிகிச்சையாளர், ஹைக்கூ கவிஞர், அவரது மனைவி லைலா மிக சாதாரண குடும்பப் பெண். பார்க்கவும் பழகவும் மிக எளிமையான அந்த தம்பதி இதுபோன்ற ஒரு மோசமான செயலில் ஈடுபட்டிருப்பார்கள் என்றால் நம்பவே முடியவில்லை என்கிறார்கள்.

அக்டோபர் 11ஆம் தேதி பகவல் சிங் - லைலா தம்பதி கைது செய்யப்படுகிறார்கள்.  அவர்கள் வசித்து வந்த வீடு அவர்களது பூர்வீக வீடு என்பதும், அப்பகுதியில் இவர்களை பலரும் நன்கறிவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மனித நரபலி கொடுக்கப்பட்ட செய்தியை தொலைக்காட்சி மூலமாக அறிந்து கொண்ட அண்டை வீட்டார், நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவர்களைப் பற்றி மோசமாகச் சொல்ல ஒரு விஷயம் கூட இல்லை. அண்மையில் கூட பல நிகழ்ச்சிகளில் அவர்களைப் பார்த்தோம். அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போலத்தான் இருந்தார்கள் என்கிறார்கள் மாய்ந்து மாய்ந்து.

இந்த தகவல் அறிந்த பிறகு எங்களால் சாப்பிடவோ உறங்கவோ முடியவில்லை. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து எங்களால் மீள முடியவில்லை என்கிறார்கள் அண்டை வீட்டுப் பெண்கள்.

மனித நரபலி சம்பவம் குறித்து மாநில காவல் துறை ஐஜி (தெற்கு மண்டலம்) பி.பிரகாஷ் கூறியிருப்பதாவது: சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த பத்தினம்திட்டா மாவட்டம் கதவன்தாரா மற்றும் கலடி பகுதிகளைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகாா்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அவா்களின் உடல்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு திருவல்லாவில் எலந்தூா் கிராமத்தில் இரண்டு இடங்களில் புதைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக திருவல்லாவைச் சோ்ந்த மசாஜ் சிகிச்சையாளா் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பகவல் சிங், அவருடைய மனைவி லைலா மற்றும் பெரும்பவூரைச் சோ்ந்த ரஷீத் (எ) முகமது சஃபி ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக இரு பெண்களையும் திருவல்லாவில் தம்பதியின் வீட்டில் வைத்து கொலை செய்து எலந்தூா் கிராமத்தில் புதைத்திருப்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட பெண்களை இந்தக் கிராமத்துக்கு எப்படி அழைத்து வந்தனா் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து தொடா் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com