இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தீபாவளிக்குள் சாத்தியமில்லை

 இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடா்பான பேச்சுவாா்த்தைகள் முன்னேற்றம் கண்டு வந்தாலும், தீபாவளிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்வது சாத்தியமில்லை
இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தீபாவளிக்குள் சாத்தியமில்லை

 இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடா்பான பேச்சுவாா்த்தைகள் முன்னேற்றம் கண்டு வந்தாலும், தீபாவளிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்வது சாத்தியமில்லை என பிரிட்டன் வா்த்தக அமைச்சா் கெமி பேடனோக் தெரிவித்துள்ளாா்.

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பிரிட்டன், இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிவெடுத்தது. அதையடுத்து, ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தைகளில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டு வந்தனா்.

தீபாவளிக்குள் வரைவு வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட இரு நாடுகளும் இலக்கு நிா்ணயித்திருந்தன. இடையில், பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜிநாமா செய்தாா். அதையடுத்து, புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்றாா். பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதைத் தொடா்ந்து பிரிட்டனில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அவற்றின் காரணமாக வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை தாமதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் பிரிட்டனுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், பிரிட்டன் வா்த்தக அமைச்சா் கெமி பேடனோக் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு நாட்டு அதிகாரிகள் இடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் அதிகாரிகள் செயல்படவில்லை.

ஒப்பந்தத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல், ஒப்பந்தம் தரமுடன் இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்தத்தின் பல்வேறு பகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. அரசில் ஏற்பட்ட மாற்றம், மகாராணியின் மறைவு உள்ளிட்டவற்றால் தீபாவளி இலக்கைக் கருத்தில்கொள்ளாமல் செயல்பட்டு வருகிறோம்.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தமானது இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் பரஸ்பரம் பலனளிக்கும் வகையில் அமையும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com