75 டிஜிட்டல் வங்கி: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

நாட்டின் 75 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
75 டிஜிட்டல் வங்கி: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

நாட்டின் 75 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோரும் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளை கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இரவு பகலாக அரசு உழைக்கிறது. இந்தியாவில் நகரம் முதல் கிராமம் வரை, ஷோரூம் முதல் காய்கறி வண்டி வரை யுபிஐ பரிமாற்றத்தை பார்க்கலாம். மத்திய அரசு வங்கி நடைமுறைகளை பலப்படுத்தி, அதை வெளிப்படைத்தன்மையுடன் மாற்றியது. 

இன்று இந்தியாவில் 99 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்களில் 5 கிமீ சுற்றளவில் வங்கிக் கிளை, வங்கிக் கடை அல்லது ‘வங்கி மித்ரா’ உள்ளது என்றார். 

2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையில், நமது நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை அமைப்பதாக நிதியமைச்சர் அறிவித்தார். டிஜிட்டல் வங்கியின்  பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்படுகின்றன. 11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் துறை வங்கிகள் மற்றும் ஒரு சிறு நிதி வங்கி ஆகியவை இந்த முயற்சியில் பங்கேற்கின்றன.

சேமிப்பு கணக்குகளை துவக்குவது, வங்கி கணக்கில் இருப்பை சரிபார்ப்பது, பாஸ்புக்கில் பதிவு செய்வது,  நிதி மாற்றம்,  வைப்பு தொகை முதலீடு, கடன் விண்ணப்பங்கள்,  காசோலைகளுக்கு பணம் செலுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான அறிவுறுத்தல்கள், கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், வங்கி கணக்கு விவரத்தை காணுதல், வரி, கட்டணங்கள் செலுத்துதல், வாரிசுதாரர் நியமனம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வங்கி வசதிகளை மக்களுக்கு வழங்கும் நிலையங்களாக இந்த அலகுகள் செயல்படும்.

வங்கிகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆண்டு முழுவதும் குறைந்த செலவில் வசதியான அணுகுமுறையுடன் வாடிக்கையாளர்களுக்கு இவை வழங்கும். டிஜிட்டல் வங்கி அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன்,  டிஜிட்டல் நிதி அறிவை பரப்பி இணையவெளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தி பாதுகாக்கும்.  டிஜிட்டல் வங்கி அலகுகள்  வழங்கும் சேவைகள் மற்றும் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு நிகழ் நேர உதவி வழங்க போதுமான டிஜிட்டல் ஏற்பாடுகளும் செய்யப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com