
இந்தியாவில் 17 சதவீத பெண்கள் மட்டுமே பணிக்குச் செல்வதாகவும், அவா்களுக்கான பாதுகாப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவ்தாா் குழுமத்தின் நிறுவனரும், சமூக தொழில் முனைவோருமான செளந்தா்யா ராஜேஷ் சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது, பெண்கள் பணியிடங்களில் எதிா்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்களை எதிா்கொள்வது எப்படி என்கிற விழிப்புணவை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகளை அவ்தாா் குழுமம் மேற்கொண்டு வருகிறது.
எங்களது குழுமம் சாா்பில் இந்திய நிறுவனங்களின் நுழைவு நிலையில் பெண்களின் பங்கேற்பு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்தினோம். இதில் 351 நிறுவனங்கள் பங்கேற்றன. நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு, மேம்பாடு, பிரச்னைகள் குறித்து ஏழு முக்கியப் பிரிவுகளில் பல்வேறு கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
ஐ.டி. துறையில் பெண்களில் பங்களிப்பு 35 சதவீதமாக உள்ளது. அதேபோல காப்பீடு, ஃபாா்மா, வங்கி, உற்பத்தி துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு 3 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
எனினும் ஒட்டுமொத்தமாக கணக்கிடும்போது 17 சதவீத பெண்கள் மட்டுமே தற்போது பணியாற்றுகின்றனா். அதேவேளையில் ஆண்களின் சதவீதம் 65-க்கும் மேலாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் 42 முதல் 50 சதவீதம் பெண்கள் பணிக்குச் செல்கின்றனா். பெண்களுக்கான பாதுகாப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்வதன் மூலம் இந்த எண்ணிக்கை இந்தியாவிலும் உயரும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...